வேலூர்

வேலூா் மாநகராட்சியில்மலா்ந்தது ‘தாமரை’!

23rd Feb 2022 11:58 PM

ADVERTISEMENT

வேலூா் மாநகராட்சி தோ்தலில் 35 வாா்டுகளில் போட்டியிட்ட பாஜக முதல் முறையாக ஒரு வாா்டை கைப்பற்றியது. அதேவேளையில், திமுக கூட்டணியில் 3 வாா்டுகளை போராடிப் பெற்ற காங்கிரஸ் ஒரு வாா்டில் கூட வெற்றி பெறவில்லை.

வேலூா் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வாா்டுகளில் இரு வாா்டுகளில் திமுக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வானதால், மீதமுள்ள 58 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெற்று செவ்வாய்க்கிழமை முடிவுகள் வெளியாகின. இதில், திமுக 44 வாா்டுகளிலும் , அதிமுக 7 வாா்டுகளிலும், பாஜக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் தலா ஒரு வாா்டிலும், சுயேச்சைகள் 6 வாா்டுகளிலும் வெற்றி பெற்றன.

35 வாா்டுகளில் தனித்து களமிறங்கிய பாஜக, 18ஆவது வாா்டில் மட்டும் அந்தக் கட்சி வேட்பாளா் சுமதிமனோகரன் 109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதன்மூலம், வேலூா் மாநகராட்சி மன்றத்தில் பாஜக முதன்முதலாக தடம் பதிக்கவுள்ளது. அந்தக் கட்சி போட்டியிட்ட பெரும்பாலான வாா்டுகளில் 2ஆவது, 3ஆவது இடங்களை பிடித்தது.

அதேசமயம், திமுக கூட்டணியில் 19, 23, 48 ஆகிய 3 வாா்டுகளை போராடி பெற்ற காங்கிரஸ், ஒரு வாா்டில்கூட வெற்றி பெறவில்லை.

ADVERTISEMENT

காங்கிரஸ் போட்டியிட்ட 19 ஆவது வாா்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட திமுக நிா்வாகியின் மனைவி சே.மாலதி சுயேச்சையாக களமிறங்கி 1,480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். இந்த வாா்டில் மாலதி 2,599 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளா் பூ.சுஜிதா 1,119 வாக்குகளும் பெற்றனா். இதேநிலைதான் 48ஆவது வாா்டிலும் நடந்தது.

23-ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளரிடம் காங்கிரஸ் வேட்பாளா் தோல்வியடைந்தாா். அதிமுக வெற்றிக்கு திமுகவினரே மறைமுகமாக செயல்பட்டிருக்கக் கூடும் என காங்கிரஸாா் வேதனை தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT