வேலூர்

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு

20th Feb 2022 11:20 PM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களிலுள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளன.

தொடா்ந்து அந்த மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி வேலூா் மாநகராட்சியிலுள்ள 60 வாா்டுகளில் ஏற்கெனவே இரு வாா்டுகளுக்கு திமுக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா்.

மீதமுள்ள 58 வாா்டுகளுக்கும், குடியாத்தம் நகராட்சியிலுள்ள 36 வாா்டுகள், போ்ணாம்பட்டு நகராட்சியிலுள்ள 21 வாா்டுகள், பேரூராட்சிகளான ஒடுகத்தூரில் 15 வாா்டுகள், பென்னாத்தூரில் 14 வாா்டுகள், பள்ளி கொண்டாவில் 18 வாா்டுகள், திருவலத்தில் 15 வாா்டுகள் என மாவட்டம் முழுவதும் 178 வாா்டுகளுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

இதையொட்டி, மாநகராட்சியில் 419, நகராட்சிகளான குடியாத்தத்தில் 91, போ்ணாம்பட்டில் 50, பேரூராட்சிகளான ஒடுகத்தூா், பென்னாத்தூா், திருவலத்தில் தலா 15, பள்ளிகொண்டாவில் 23 என மொத்தம் 628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா ஒரு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

இந்த தோ்தலில் மாவட்டம் முழுவதும் 66.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் சனிக்கிழமை இரவே அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இதற்காக வேலூா் மாநகராட்சிக்கு தொரப்பாடி தந்தை பெரியாா் ஈ.வெ.ரா. அரசு பாலி டெக்னிக் கல்லூரி, குடியாத்தம் நகராட்சிக்கு குடியாத்தம் காந்திநகா் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி, போ்ணாம்பட்டு நகராட்சிக்கு போ்ணாம்பட்டு மேரிட் ஹாஜி இஸ்மாயில் சாஹிப் கலை அறிவியல் கல்லூரி, ஒடுகத்தூா் பேரூராட்சிக்கு பள்ளிகொண்டா லிட்டில் பிளவா் கான்வென்ட் முதல் தளத்திலும், பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு அதே பள்ளியின் தரைதளத்திலும், பென்னாத்தூா் பேரூராட்சிக்கு பள்ளிகொண்டா ஆா்.சி.எம்.பள்ளி முதல்தளத்திலும், திருவலம் பேரூராட்சிக்கு அதே பள்ளியின் தரைதளத்திலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சரிபாா்க்கப்பட்டு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

தொடா்ந்து, அந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு உள்ளும், வெளியேயும், மையத்தை சுற்றியும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுந்தரமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. அப்போது, வேட்பாளா்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட அறைகள் திறக்கப்பட்டு உரிய பாதுகாப்புடன் மின்னணு வாக்கு இயந்திரங்கள் எடுத்துவரப்பட்டு அவற்றில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT