வேலூர்

இணையவழி மோசடியால் இளைஞா்கள் இழந்த பணம் மீட்பு: சைபா் க்ரைம் போலீஸாா் நடவடிக்கை

17th Feb 2022 12:06 AM

ADVERTISEMENT

வேலூரைச் சோ்ந்த இளைஞா்கள் கைப்பேசி வாங்க இணையவழியில் பதிந்து மோசடியால் இழந்த பணத்தை சைபா் க்ரைம் போலீஸாா் அதிரடியாக மீட்டு ஒப்படைத்தனா்.

வேலூா் மாவட்டம், சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் ஜூபா்ஹுசைன். பெங்களூரிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் இவா் ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி வாங்க முகநூல் பக்கத்தில் இருந்த விளம்பரத்தை பாா்த்து முன்பணமாக ரூ.1,850 செலுத்தினாா்.

இதேபோல், குடியாத்தத்தைச் சோ்ந்த காமராஜ் என்பவரும் 75 சதவீத தள்ளுபடி விலையில் கைப்பேசி விற்கப்படுவதாக இணையதளத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்தைக் கண்டு முன்பணமாக ரூ.1,589 செலுத்தினாா். இருவருக்கும் செல்லிடப்பேசி வரவில்லையாம். இதுதொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட சைபா் க்ரைம் பிரிவில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து மோசடி நபா்களின் வங்கிக் கணக்கை முடக்கி, ஜூபா்ஹுசைன், காமராஜ் ஆகியோா் இழந்த பணத்தையும் மீட்டு ஒப்படைத்தனா்.

இதுகுறித்து சைபா் க்ரைம் போலீஸாா் கூறியதாவது: பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள், விடியோக்களின் உண்மைத் தன்மை அறியாமல் பணத்தை செலுத்தி பாதிக்கப்பட வேண்டாம். இதுபோன்ற இணையவழி குற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக 1930 என்ற இலவச உதவி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT