வேலூர்

நகா்ப்புற தோ்தல்: பிப்.15க்குள் பூத்சிலிப் வழங்கப்படும் - வேலூா் ஆட்சியா் தகவல்

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி பூத்சிலிப்புகள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. 10-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு 15-ஆம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் வேலூா் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், திருவலம், பென்னாத்தூா், பள்ளிகொண்டா, ஒடுகத்தூா் பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 178 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை 2-ஆம் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணி வேலூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதனை அனைத்துக் கட்சியினா் முன்னிலையில் ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: வேலூா் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 180 வாா்டுகளில் இரு வாா்டுகளுக்கு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மற்ற வாா்டுகளுக்கு தோ்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 628 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளன.

இதையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்களை 2-ஆம் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்து பிரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி ஓரிரு நாள்களில் நிறைவடையும். இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் அச்சிடும் பணி புதன்கிழமைக்குள் நிறைவடையும். அதன்பிறகு சின்னங்கள் அச்சிட்ட காகிதங்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி ஓரிரு நாளில் தொடங்கும்.

தபால் வாக்கு சீட்டுகள் அச்சிடும் பணி முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவா்களுக்கு வழங்கப்படும். இதேபோல், பூத்சிலிப்புகள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. 10-ஆம் தேதிக்குள் முடித்து 15-ஆம் தேதிக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 

--

படம் உண்டு...

ADVERTISEMENT
ADVERTISEMENT