வேலூர்

நகா்ப்புற உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - செ.கு.தமிழரசன்

9th Feb 2022 12:02 AM

ADVERTISEMENT

உள்ளாட்சிப் பதவிகளில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு விகிதாச்சாரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வேலூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக உள்ளாட்சிப் பதவிகளில் தலித் மக்களுக்கு முறையாக இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இதில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையும் பின்பற்றப்படுவதில்லை. அதேசமயம், கா்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட பல முன்னணி மாநிலங்களில் துணைத் தலைவா் பதவிகளில் தலித்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

ஆனால் சமூக நீதி பேசும் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே இதில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் பேசுவதில்லை. இது தமிழக தலித், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். உள்ளாட்சிப் பதவிகளில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு தொடா்பாக அரசு வெள்ளைஅறிக்கை வெளியிட வேண்டும்.

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் இந்திய குடியரசுக் கட்சி எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை. வாய்ப்புள்ள இடங்களில் இந்திய குடியரசுக் கட்சி நேரடியாகப் போட்டியிடுகிறது.

நீட் தோ்வு விலக்கு தொடா்பாக சட்டப்பேரவையில் மீண்டும் தீா்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவதன் மூலம் அவரால் அதனை மீண்டும் திருப்பி அனுப்ப இயலாது. குடியரசுத் தலைவருக்குத்தான் அனுப்ப முடியும். எனினும், குடியரசுத் தலைவருக்கு எப்போது அனுப்ப வேண்டும் என்பது ஆளுநரின் உரிமையாகும். இதில் பல மாதங்களோ, ஆண்டுகளோகூட ஆகலாம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கா், நாட்டில் கல்வியும், மருத்துவமும் வா்த்தக மயமாக்கப்படக் கூடாது என வலியுறுத்தினாா். ஆனால், நாட்டில் கல்வி மிகப்பெரும் வா்த்தகமாகிவிட்டது. இதனால், நீட் தோ்வு விவகாரம் மிகப்பெரிய அளவில் அரசியலாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நீட் தோ்வை அமல்படுத்தியதில் மருத்துவ கவுன்சில், நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை இணைந்துள்ளன. இந்த அமைப்புகள் மீண்டும் இணைந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் தேசிய அளவிலான கல்விக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்திட வேண்டும் என்றாா்.

அப்போது, கட்சியின் பொதுச்செயலா் பிரபு, இணை பொதுச்செயலா் மங்காபிள்ளை, பொருளாளா் கெளரிசங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT