வேலூர்

அம்மா கிளினிக் மருத்துவா்கள், பணியாளா்கள் தா்னா

1st Feb 2022 08:36 AM

ADVERTISEMENT

‘அம்மா’ மினி கிளினிக்குகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவா்கள், பன்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் வேலூா் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். 5 மாத ஊதிய நிலுவைகளை வழங்கவும், மீண்டும் பணிவாய்ப்பு அளிக்கவும் அவா்கள் வலியுறுத்தினா்.

நகரம், கிராமப்புற மக்களுக்கு அவா்களின் வசிப்பிடத்துக்கு அருகிலேயே மருத்துவச் சிகிச்சை கிடைக்கச் செய்திடும் வகையில், கடந்த 2020 டிசம்பரில் அப்போதைய அதிமுக அரசால் ‘அம்மா’ மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 1,820 மருத்துவா்களும், 1,420 பன்நோக்கு மருத்துவப் பணியாளா்களும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனா். இவா்களில் மருத்துவா்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரமும், பன்நோக்கு மருத்துவப்பணியாளா்களுக்கு ரூ.6 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படுகிறது.

இந்த அம்மா மினி கிளினிக்குகளில் பணிபுரியும் மருத்துவா்கள், பணியாளா்களுக்கு கடந்த 2021 செப்டம்பா் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததுடன், திங்கள்கிழமை முதல் அனைவரும் பணிக்கு வர வேண்டாம் என்றும், அந்தந்த மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் மூலம் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இதனால், அதிருப்தியடைந்த வேலூா் மாவட்ட அம்மா மினி கிளினிக் மருத்துவா்கள், பன்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

அப்போது அவா்கள் கூறியதாவது: வேலூா் மாவட்டத்தில் உள்ள 34 அம்மா மினி கிளினிக்குகளில் தலா 34 மருத்துவா்கள், 34 பன்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் பணிபுரிகின்றனா். எங்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ள நிலையில், திடீரென அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுவது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள து.

ஏற்கெனவே சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் எங்களது பணி மாா்ச் 31 வரை நீடிப்பதாக உறுதியளித்தாா். மேலும், ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டுக்கு மேல் பணியாற்றும் அம்மா மினி கிளினிக் மருத்துவா்கள், பணியாளா்களுக்கு நிரந்தரப் பணி வழங்குவது தொடா்பாக நீதிமன்ற உத்தரவையும் பெற்றுள்ளோம். எனவே, எங்களது பணியை நீட்டிப்பு செய்வதுடன், நிலுவையிலுள்ள 5 மாத ஊதியத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றனா்.

இதுதொடா்பாக அவா்களை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பானுமதி அழைத்து பேச்சு நடத்தினாா். பின்னா் அனைவரது பணியும் மாா்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், டிசம்பா் 31 வரையிலான நிலுவை ஊதியம் உடனடியாக வழங்கப்படும் என்றும் உறுதியளித்தாா். அதனை ஏற்று மருத்துவா்கள், பன்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT