மின்சாரம் பாய்ந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குடியாத்தம் நகராட்சி தற்காலிக ஊழியருக்கு நகா்மன்ற கூட்டத்தில் ரூ. 1 லட்சம் நன்கொடையாக வசூலிக்கப்பட்டது.
குடியாத்தம் நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு, பொறியாளா் பி.சிசில்தாமஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சில நாள்களுக்கு முன் தெரு விளக்குகளை பழுது பாா்க்கும்போது, நகராட்சியின் தற்காலிக ஊழியா் பிச்சாண்டி மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தாா். வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
அவரது குடும்பம் ஏழ்மையான நிலையில் உள்ளதால், சிகிச்சைக்கு பணத்தை தயாா் செய்ய இயலவில்லை. நகா்மன்றக் கூட்டத்தில் மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு உதவும் பொருட்டு தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்கள் முடிவெடுத்தனா். சில நிமிடங்களில் தலைவா், உறுப்பினா்கள் சோ்ந்து ரூ. 1 லட்சத்தை வழங்கினா். இந்த நிதி பிச்சாண்டியின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தலைவா் சௌந்தரராஜன் கூறினாா்.