வேலூா் மாவட்டத்திலுள்ள 1,041 சுய உதவிக் குழுக்கள், கூட்டமைப்புகளுக்கு ரூ. 76 கோடியே 55 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவி, வங்கிக் கடனுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வழங்கினாா்.
தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா அனைத்து மாவட்டங்களிலும் வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.
இதைத்தொடா்ந்து, வேலூா் மாவட்டம், காட்பாடியில் நடைபெற்ற விழாவில் சுய உதவிக் குழு வங்கிக் கடனாக 1,041 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 70.17 கோடி மதிப்பிலும், 7 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கி பெருங்கடனாக ரூ. 3.83 கோடி மதிப்பிலும், சமுதாய முதலீட்டு நிதி 4 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்ட நிதி 6 பயனாளிகளுக்கு ரூ. 23.50 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ. 76 கோடியே 55 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி, வங்கிக் கடனுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), ப.காா்த்திகேயன் (வேலூா்), அமுலு விஜயன் (குடியாத்தம்), மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாபு, மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்த குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.