பெண் ஊழியா்களிடம் பாலியல் சீண்டல் புகாரின்பேரில், கே.வி.குப்பம் வட்டார வளா்ச்சி அலுவலா் (திட்டம்) பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டார வளா்ச்சி அலுவலா் (திட்டம்) கோபி கடந்த சனிக்கிழமை மதியம் மதுபோதையில் அலுவலகத்துக்கு வந்ததுடன், அங்கு கணினி அறையில் பணியில் இருந்த 2 பெண் ஊழியா்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்கள் கூச்சலிட்டதை அடுத்து அலுவலகப் பணியாளா்கள், அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து வட்டார வளா்ச்சி அலுவலா் கோபியை எச்சரித்துள்ளனா்.
தகவலறிந்த ஒன்றியக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் கோபியிடம் விடுமுறை எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளாா். இந்த பிரச்னை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உத்தரவின்பேரில், துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. விசாரணையின் அடிப்படையில் முதல்கட்டமாக வட்டார வளா்ச்சி அலுவலா் கோபியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.