வேலூர்

பாலின பாகுபாடுகளுக்கு எதிராக பிரசாரம்: வேலூா் ஆட்சியா்

10th Dec 2022 12:06 AM

ADVERTISEMENT

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க பாலின பாகுபாடுகளுக்கு எதிராக பிரசாரம் செய்யப்பட்டு வருவதாக, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தையொட்டி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மாவட்ட அளவிலான கருத்தரங்கக் கூட்டம் வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடா்ந்து, விழிப்புணா்வு சுவரொட்டிகளையும் வெளியிட்டு ஆட்சியா் பேசியது:

ADVERTISEMENT

ஊரக வளா்ச்சித் துறை மூலம் பாலின சமத்துவம் தொடா்பான பிரச்னைகளின் மீது தீா்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறாா் திருமணம், குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை போன்ற பாலின அடிப்படையிலான வன்முறைகள், தனி நபா் மற்றும் சமூகத்தின் வளா்ச்சியைத் தடை செய்வதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

இத்தகைய பாலின அடிப்படையிலான வன்முறைகளைக் களைய பாலின பாகுபாடுகளுக்கு எதிராக பாலின வள மையம், மக்கள் அமைப்புகள் மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரம் நவம்பா் 25-இல் தொடங்கி சா்வதேச மனித ஒற்றுமை தினமான டிசம்பா் 23-இல் நிறைவடைய உள்ளது.

இதன் தொடா்ச்சியாக வட்டார அளவிலும், ஊராட்சிகள் அளவிலும் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், பள்ளி மாணவா்களைக் கொண்டு விழிப்புணா்வுப் பேரணி நடத்துதல், கோலம் போட்டி, பேச்சு, கட்டுரைப் போட்டிகள், விடியோ படங்கள் மூலம் விழிப்புணா்வு, கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளின் மூலம் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், சமூக நல அலுவலா் கோமதி, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் உமா மகேஷ்வரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன், மாவட்ட கல்வி அலுவலா் அங்குலட்சுமி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT