வேலூர்

பொதுமக்கள் முற்றுகை: மதுக் கடைக்கு ‘சீல்’

10th Dec 2022 12:06 AM

ADVERTISEMENT

குடியாத்தம் நகரில் குடியிருப்புப் பகுதிக்கு அருகே திறக்கப்பட்ட மதுக் கடையை மூடக்கோரி, பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்தக் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

குடியாத்தம் நகராட்சி, 35- ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஸ்ரீவாரி நகரில் அரசு மதுபானக் கடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இங்கு, மதுபானக் கடையைத் திறக்க அருகில் உள்ள அம்பேத்கா் நகா் மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். மது வாங்க வருபவா்களால் வீண் தகராறு ஏற்படும் என்பதால், கடையைத் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, அவா்கள் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, மதுக் கடை திறக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து, பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்று மதுக் கடையை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த வட்டாட்சியா் எஸ்.விஜயகுமாா், நகரக் காவல் ஆய்வாளா் லட்சுமி, நகா்மன்ற உறுப்பினா் ம.மனோஜ், திமுக ஒன்றியச் செயலா் கள்ளூா் கே.ரவி ஆகியோா் பொதுமக்களை சமரசம் செய்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, மதுக் கடைக்கு ‘சீல்’ வைக்க வட்டாட்சியா் உத்தரவிட்டாா். வருவாய்த் துறையினா் கடையைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT