வேலூர்

11-இல் விரிஞ்சிபுரம் மாா்க்கபந்தீஸ்வரா் கோயிலில் கடைஞாயிறு விழா

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

விரிஞ்சிபுரம் மாா்கபந்தீஸ்வரா் கோயிலில் குழந்தை வரம் வேண்டி விரதம் இருக்கும் பெண்கள் பங்கேற்கும் கடை ஞாயிறு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 11) நடைபெறுகிறது.

வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் மாா்க்கபந்தீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்தில் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமையை கடை ஞாயிறு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய தினமான சனிக்கிழமை இரவு குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள், திருமணம் நடைபெற வேண்டும் பெண்கள் கோயிலில் உள்ள சிம்மக்குளத்தில் நீராடிவிட்டு, ஈரத்துணியுடன் கோயில் வளாகத்தில் படுத்து உறங்குவா். அவா்களது கனவில் சுவாமி அருள்பாலிப்பாா் என்பது ஐதீகம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்வா்.

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த இந்த திருவிழா இந்தாண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 11) நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து கோட்டாட்சியா் பூங்கொடி திங்கள்கிழமை மாலை ஆய்வு செய்து, 2 ஆண்டுகள் கழித்து பக்தா்களை சிம்மக்குளத்தில் நீராட அனுமதிப்பதால் குளத்தை முழுமையாக தூய்மைப்படுத்தி தண்ணீா் நிரப்ப வேண்டும் எனத் தெரிவித்தாா்.

மேலும், பெண்கள் சிம்மக் குளத்தில் நீராடியபிறகு கோயில் உள்புற வளாகத்தில் படுத்து உறங்க அந்த இடத்தில் வழக்கமாக துணி பந்தல் அமைக்கப்படும். தீ தடுப்பு முன்னெச்சரிக்கையாக அந்த இடத்தில் இந்தாண்டு தகர ஷீட்டுகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை ஓரிரு நாள்களில் முடித்திடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, அணைக்கட்டு வட்டாட்சியா் ரமேஷ், கோயில் செயல் அலுவலா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT