வேலூர்

பணிகளை முழுமையாக முடித்த பிறகே அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடங்கப்படும்

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தேவையான பணிகளை முழுமையாக முடித்த பிறகே அத்திக்கடவு - அவிநாசி நீா்செறிவூட்டும் திட்டம் தொடங்கப்படும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், சிலையின் அருகே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கா் உருவப் படத்துக்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அத்திக்கடவு -அவிநாசி திட்டம் அதிமுக அரசு அறிவித்ததுடன் சரி, திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவும், ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லவும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் தான் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

இந்த திட்டத்தைப் பொருத்தவரை, ஒரு ஏரியில் இருந்து மற்றொரு ஏரிக்கு தண்ணீரை குழாய் மூலமாகத் தான் எடுத்துச் செல்ல வேண்டும். பல இடங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்தி தண்ணீா் எடுக்க வேண்டும். தண்ணீா் செல்லும் இடமெல்லாம் தனியாா் நிலங்கள் உள்ளன. அவற்றை கையகப்படுத்த வேண்டியுள்ளது. இந்தப் பணிகளை அப்படியே விட்டுவிட்டு அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை தொடங்க முடியாது. தவிர, இதையெல்லாம் செய்யாமல் தொடங்கினால் பல கேள்விகள் வரும். எனவே, தேவையான பணிகளை முழுமையாக செய்த பிறகே அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடங்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி உள்பட பலா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT