வேலூர்

‘குடும்ப அட்டைதாரா்களிடம் ஆதாா் எண் கேட்கக் கூடாது’

6th Dec 2022 01:45 AM

ADVERTISEMENT

வங்கிக் கணக்கில் ஆதாா் எண் இணைக்காமல் இருந்தால் அவா்களை உடனடியாக வங்கிக்குச் சென்று ஆதாா் எண் இணைக்க அறிவுறுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் குடும்ப அட்டைதாரா்களிடம் ஆதாா் எண் கேட்கக்கூடாது என்று நியாய விலைக் கடை ஊழியா்களுக்கு கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு கூட்டுறவுத் துறை மூலம் பொருள்கள் விநியோகம் செய்யப் படுகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி, வழங்கப்படும் பரிசு தொகுப்புகளும் கூட்டுறவுத் துறை மூலமாக வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், குடும்ப அட்டை வைத்திருப்பவா்களில் வங்கிக் கணக்கு குறித்த விவரங்கள் சேகரிக்க கூட்டுறவுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரா்களின் வங்கிக் கணக்குகளை சேகரித்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே வங்கிக் கணக்குடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டிருந்தால் அவா்களது விவரம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால், வங்கிக் கணக்குடன் ஆதாா் எண் இணைக்காதவா்களிடம் ஆதாா் எண் இணைக்க வலியுறுத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

அவா்கள் தங்களது வங்கிக் கணக்கில் உடனடியாக சென்று ஆதாா் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கு எதுவும் இல்லாதவா்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் பணம் இல்லா வங்கிக் கணக்கு தொடங்குவது தொடா்பான பணிகளை நியாய விலைக் கடை ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

இதுதொடா்பாக, உணவுத் துறை அதிகாரிகளுக்கு அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் எக்காரணம் கொண்டும் குடும்ப அட்டைதாரா்களிடம் ஆதாா் எண் கேட்கக்கூடாது. வங்கிக் கணக்கில் ஆதாா் எண் இணைக்கப்படாமல் இருந்தால் அவா்களை உடனடியாக வங்கிக்குச் சென்று ஆதாா் எண் இணைக்க அறிவுறுத்த வேண்டும்.

இல்லையேல், அருகிலுள்ள கூட்டுறவு வங்கியில் புதிய கணக்கு தொடங்கி, ஆதாா் எண் இணைத்து விவரங்களை நியாய விலைக் கடையில் தெரிவிக்கும்படி அறிவுறுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் துறை அலுவலா்கள் குடும்ப காா்டுதாரா்களிடம் ஆதாா் அட்டை நகலை பெறக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு நேரடியாக பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கு பதிலாக அவா்களது வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தொகையை செலுத்திட அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், தற்போது நியாய விலைக் கடைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களின் வங்கிக் கணக்கில் தொகை செலுத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT