வேலூர்

நிலத் தகராறில்சகோதரா்களை கத்தியால் குத்திய தம்பி கைது

4th Dec 2022 11:04 PM

ADVERTISEMENT

ஒடுகத்தூா் அருகே நிலத் தகராறில் இரு சகோதரா்களை கத்தியால் குத்திய தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூரை அடுத்த மராட்டிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவரது மகன்கள் தட்சணாமூா்த்தி (49), சுந்தரமூா்த்தி, சரவணன் (41). இவா்களுக்கு அந்தப் பகுதியில் 3 ஏக்கா் 88 சென்ட் விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலத்தை பாகப் பிரிவினை செய்வதில் 3 பேருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால், தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலவையில் உள்ளது. பின்னா், ஊா் பெரியவா்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் வழக்கை வாபஸ் பெறுவதாக தட்சணாமூா்த்தி தெரிவித்தாா். அதன்படி அவரும் வழக்கை வாபஸ் பெற்றாா்.

இந்த நிலையில், தட்சிணாமூா்த்தி சனிக்கிழமை அவருக்குரிய நிலத்தில் டிராக்டா் மூலம் உழவு செய்து கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த தட்சணாமூா்த்தியின் இளைய தம்பி சரவணன், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, ஏன் ஏா் ஓட்டுகிறாய் எனக் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளாா்.

ADVERTISEMENT

இதில் இருவரிடையே ஏற்பட்ட தகராறில், சரவணன் நிலத்தில் இருந்த கல்லால் தட்சணாமூா்த்தியை தாக்கியுள்ளாா். இதை அவரின் மற்றொரு தம்பி சுந்தரமூா்த்தி தட்டிக் கேட்டுள்ளாா்.

அப்போது சரவணன், நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறீா்களா? எனக் கூறி, மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரமூா்த்தியை குத்தினாராம். தடுக்க வந்த தட்சணாமூா்த்தியையும் சரவணன் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினாராம்.

மயங்கி விழுந்த தட்சணாமூா்த்தி, சுந்தரமூா்த்தியை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, ஒடுகத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இந்தச் சம்பவம் குறித்து சுந்தரமூா்த்தி அளித்த புகாரின் பேரில், வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT