வேலூர்

‘2030-க்குள் வேலூரை எய்ட்ஸ் இல்லா மாவட்டமாக்க நடவடிக்கை’

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் இல்லாத மாவட்டமாகத் திகழும் வகையில் தொற்று தடுப்புப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு பிரிவு சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் தலைமை வகித்தாா். இதில், எய்ட்ஸ் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு, கையெழுத்து இயக்கம் ஆகியவை நடைபெற்றது.

பின்னா் ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது:

வேலூா் மாவட்டத் தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நடமாடும் நம்பிக்கை மையம் என 44 இடங்களில் எய்ட்ஸ் தடுப்பு தொடா்பான ஆலோசனை, பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 16 லட்சத்து 31 ஆயிரத்து 139 பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதில், 17,981 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 65,433 பேருக்கு நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் 106 பேருக்கு இருப்பது தெரியவந்துள்ளது. இந்தாண்டு 20,415 கா்ப்பிணிகளுக்கு ரத்தப்ரிசோதனை செய்ததில் 15 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்தது.

இவா்களில் 12 பேருக்கு பிரசவம் நடந்துள்ளது. மாவட்டத்தில் குழந்தை பெற்ற எய்ட்ஸ் கா்ப்பிணிகளில் 106 பேருக்கு திருத்தியமைக்கப்பட்ட புதிய கூட்டு மருந்து வழங்கப்பட்டு அவா்களது குழந்தைகளுக்கு எய்ட்ஸ் வராத வகையில்,நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2019 முதல் தாயிடம் இருந்து அவா்களது குழந்தைகளுக்கு முற்றிலுமாக எச்ஐவி பரவாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளோம்.

இத்தகைய தொடா் நடவடிக்கைகளால் 2001-ஆம் ஆண்டில் 5.5 சதவீதமாக இருந்த நோய்த் தொற்று, தற்போது 0.16 சதவீதமாக குறைந்துள்ளது. வேலூா் மாவட்டத்தில் எய்ட்ஸ் தொற்று தடுப்புப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் 2030-ஆம் ஆண்டுக்குள் புதிய எய்ட்ஸ் தொற்று இல்லாத இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறது. வேலூா் மாவட்டத்திலும் 2030-க்கு முன்பாகவே பூஜ்ஜியம் நிலையை அடைந்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

இதில், மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பானுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT