வேலூர்

பேருந்து நிலைய கழிப்பறையில் கட்டணம் வசூலிப்பு: அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் எதிா்ப்பு

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

வேலூா் புதிய பேருந்து நிலைய கழிப்பறையில் கட்டணம் வசூலிப்புக்கு அரசுப்பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். பேருந்து நிலைய கழிப்பறையை அரசுப்பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனக்கூறி அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை கடந்த வாரம் ஏலம் விடப்பட்டது. இந்த நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் வியாழக்கிழமை புதிய பேருந்து நிலைய கழிப்பறையில் சிறுநீா் கழிக்க சென்றுள்ளனா். அப்போது, கழிப்பறை முன்பு அமா்ந்திருந்த பெண் ஒருவா், அவா்களிடம் கட்டணம் கேட்டுள்ளாா். இதையடுத்து, அந்த பெண்ணுடன் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த ஒப்பந்ததாரா், வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களிடம் பேச்சு நடத்தினாா்.

அப்போது, அனைத்து ஊா்களிலும் உள்ள பேருந்து நிலைய கழிப்பறைகளை அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு மட்டும் கட்டணம் கேட்பது குறித்து கேள்வியெழுப்பினா்.

தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்தனா். இந்தப் பிரச்னை குறித்து மேயா், உயா் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து ஓட்டுநா், நடத்துநா்கள் அங்கிருந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT