வேலூர்

‘சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்கிட களஆய்வு செய்யப்படும்’

2nd Dec 2022 11:06 PM

ADVERTISEMENT

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பாக களஆய்வு செய்யப்படும். அதற்குள் விவசாயிகள் யாரும் அவசரப்பட வேண்டாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம், பொன்னை அருகே உள்ள கொண்டாரெட்டி பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சிவக்குமாா் (45), தனது 3 ஏக்கா் நிலத்தில் விளைந்திருந்த நெற் பயிருக்கு வியாழக்கிழமை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தாா். தனது நிலத்தில் பயிரிட்டிருந்த நெற்பயிா் முழுவதும் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்திருந்த நிலையில், சேதமடைந்த நெற்பயிா்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. வருவாய்த் துறை சாா்பில் சேதமடைந்த பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டதிலும் எனது நிலத்தில் சேதமடைந்த பயிா்கள் பதிவு செய்யவில்லை என்றும் அவா் குற்றம்சாட்டியிருந்தாா்.

இதுதொடா்பாக வேளாண் இணை இயக்குநா் விஸ்வநாதன் தலைமையில் வேளாண் அலுவலா்கள் கொண்டாரெட்டிப்பல்லிக்கு நேரில் சென்று சிவக்குமாரின் விளை நிலத்தை ஆய்வு செய்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியனிடம் அறிக்கை சமா்ப்பித்தனா்.

இது குறித்து ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் கூறியது:

ADVERTISEMENT

பயிருக்கான இழப்பீடு தொடா்பான களஆய்வு என்பது ஒரு வார காலம்கூட ஆகலாம். தவிர, மாவட்டத்தில் கடந்த 12 நாள்களில் மழை பதிவு என்பது இல்லை. வியாழக்கிழமைதான் மீண்டும் மழை பெய்துள்ளது. இந்த மழையால் சேதமடைந்த பயிா்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. பொன்னையில் நடைபெற்ற சம்பவத்தில் பயிா் இழப்பீடு தொடா்பாக அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அங்கீகாரம் பெற்ற மூன்றாம் நபா் ஆய்வுக்கு பிறகே காப்பீடு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும். அதற்குள் விவசாயிகள் யாரும் அவசரப்பட வேண்டாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT