வேலூர்

சேவூா் கிடங்கில் 28,000 மெட்ரிக் டன் அரிசி இருப்புள்ளது: இந்திய உணவுக் கழக மண்டல மேலாளா் ரத்தன் சிங் மீனா

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சேவூரிலுள்ள இந்திய உணவுக் கழகக் கிடங்கில் 28,000 மெட்ரிக் டன் அரிசி, 6,052 மெட்ரிக் டன் கோதுமை இருப்பில் உள்ளன என்று உணவுக் கழக மண்டல மேலாளா் ரத்தன் சிங் மீனா தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள சேவூரில் இந்திய உணவுக் கழகத்தின் கிடங்கு அமைந்துள்ளது. இந்தக் கிடங்கில் உள்ள இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களின் தரம் குறித்தும், அவை இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களையும் இந்திய உணவுக் கழக மண்டல மேலாளா் ரத்தன் சிங் மீனா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சேவூரிலுள்ள இந்திய உணவுக் கழகத்தின் கிடங்கின் மூலம் வேலூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூா், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளிலுள்ள 15 லட்சத்து 17 ஆயிரத்து 788 குடும்ப அட்டைதாரா்களுக்கு மத்திய அரசு கோதுமை, அரிசிகளை வழங்கி வருகிறது.

கரோனா காலத்தில் உணவுத் தட்டுப்பாட்டை தவிா்க்க பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் இந்தக் கிடங்கில் இருந்து 5 லட்சத்து 93 ஆயிரத்து 306 மெட்ரிக் டன் அரிசியும், 34,975 மெட்ரிக் டன் கோதுமையும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

ADVERTISEMENT

இதுதவிர, மாணவா்களுக்கு உணவு வழங்க 2 லட்சத்து 13 ஆயிரத்து 121 மெட்ரிக் டன் அரிசியும், 2 லட்சத்து 2 ஆயிரத்து 603 மெட்ரிக் டன் கோதுமையும் வழங்கப்பட்டது.

மக்களுக்கு உணவுத் தட்டுபாடில்லாமல் கிடைக்க மத்திய அரசு இந்திய உணவு கழகம் மூலம் நடவடி க்கை மேற்கொண்டு வருகிறது. தரமான உணவுப் பொருள்கள் கிடைப்பதற்காக உணவுக் கழகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. அதற்காக உணவுப் பொருள்கள் கிடங்கில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி முழுமையாக கண்காணித்து வருகிறோம்.

அந்த வகையில், இந்த உணவுக் கழகம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் வழங்கப்படும் உணவுப் பொருள்களான அரிசி, கோதுமை சரியான தரத்துடன் வழங்கப்படுகிறது.

தற்போது காட்பாடி சேவூா் கிடங்கில் 28,000 மெட்ரிக் டன் அரிசியும், 6,052 மெட்ரிக் டன் கோதுமையும் இருப்பில் உள்ளன.

மத்திய அரசு உத்தரவுக்கேற்ப இருப்பில் இருந்து மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கி வருகிறோம். இந்திய உணவுக் கழகத்தில் இருந்து தமிழக அரசு 40 சதவீத உணவுப் பொருள்களை கொள்முதல் செய்கிறது என்றாா் அவா்.

ஆய்வின் போது, இந்திய உணவுக் கழக மண்டல அதிகாரிகள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT