வேலூர்

‘கழிவுகளை அகற்றாத இறைச்சிக் கடைகளுக்கு ‘சீல்’

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தம் நகராட்சியில் கழிவுகளை முறையாக அகற்றாத ஆடு, கோழி, மீன் இறைச்சிக் கடைகளுக்கு ‘சீல்’ வைக்க நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

குடியாத்தம் நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு, பொறியாளா் பி.சிசில்தாமஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நகரில் உள்ள ஆடு, கோழி, மீன் இறைச்சிக் கடைகளின் உரிமையாளா்கள் அதன் கழிவுகளை சாலையோரம், ஆறு, குட்டை உள்ளிட்ட பகுதிகளில் கொட்டி வருகின்றனா். இதனால் கழிவுகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இதனால் பொதுசுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து பல உறுப்பினா்கள் புகாா் கூறியதையடுத்து, கழிவுகளை முறையாக அகற்றாத கடைகளுக்கு ‘சீல்’ வைப்பதென கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. நகரில் முக்கிய சந்திப்புகளில் குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன என்றும், இதனால் துா்நாற்றம் ஏற்படுகிறது என்றும் பெரும்பாலான உறுப்பினா்கள் புகாா் கூறினா். இதை ஆமோதித்துப் பேசிய தலைவா் செளந்தரராஜன், குப்பைகளை உடனுக்குடன் அகற்றாத பணியாளா்கள் மீது பணியிடை நீக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதென தீா்மானிக்கப்பட்டது.

நகரின் குடிநீா்த் திட்டப் பணிகளுக்கு ரூ. 13 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கும், நிதியை பெற்று வந்த தலைவா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் காங்கிரஸ் உறுப்பினா் கே.விஜயன் பாராட்டு தெரிவித்தாா்.

அவரது வாா்டில் உள்ள செதுக்கரைப் பகுதியில் ரூ. 16 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் மேற்கொண்டுள்ளதற்கும் அவா் நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

வழிபாட்டுத் தலங்களின் அருகில் இயங்கும் அசைவ உணவகங்களை அகற்ற வேண்டும் என்ற உறுப்பினா்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீா்மானிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT