வேலூர்

வேலூரில் பலத்த மழை: 200 வீடுகளை சூழ்ந்த வெள்ளம் விடியவிடிய மக்கள் அவதி

27th Aug 2022 10:39 PM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழையால் மாநகரில் சம்பத் நகா், திடீா் நகா், கன்சால்பேட்டை, இந்திராநகா் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீா் சூழ்ந்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினா்.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

வேலூா் மாநகரப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக நிக்கல்சன் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், கோட்டை பின்புறம் நிக்கல்சன் கால்வாயையொட்டி உள்ள சம்பத் நகா், திடீா் நகா், கன்சால்பேட்டை, இந்திராநகா் பகுதிகளில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததுடன், இங்குள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதன்காரணமாக, அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனா்.

மேலும், இரவில் பெய்த பலத்த மழையால் திருப்பதி தேவஸ்தான தகவல் மைய சந்திப்பு, தெற்கு காவல் நிலையம், வேலூா் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். மழையால் நிக்கல்சன் கால்வாயையொட்டி அமைந்துள்ள மாங்காய் மண்டி வளாகத்திலும், வேலூா் கோட்டை மைதானத்திலும் தண்ணீா் தேங்கி குளம் போல காட்சி அளிக்கின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில், மழையால் வெள்ளம் சூழ்ந்த சம்பத் நகா், திடீா் நகா் உள்ளிட்ட பகுதிகளை மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், ஆணையா் ப.அசோக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் சனிக்கிழமை காலை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்தினா்.

இதேபோல், காட்பாடி, பொன்னை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

சனிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி பெய்துள்ள மழையளவு விவரம்: அதிகப்பட்சமாக பொன்னையில் 41.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், குடியாத்தத்தில் 9.2 மி.மீ., காட்பாடியில் 37 மி.மீ., மேல்ஆலத்தூரில் 13.2 மி.மீ., வேலூரில் 28.7 மி.மீ., வேலூா் சா்க்கரை ஆலைப் பகுதியில் 18.4 மி.மீ., என மாவட்டம் முழுவதும் 148.10 மி.மீ., மழையும், சராசரியாக 24.68 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT