வேலூர்

வைப்புத்தொகை பெற முகவா்களை சோ்க்க ரகசிய கூட்டம்

22nd Aug 2022 12:18 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம் அருகே தனியாா் நிதி நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் முதலீடு செய்யும் பணம் சில மாதங்களில் இரட்டிப்பாக கிடைக்கும் என்று கூறி பொதுமக்களிடம் வைப்புத் தொகை பெற இருந்தனா்.

தகவலறிந்த வருவாய், காவல் துறையினா் அங்கு

சென்று பொதுமக்களையும், நிதி நிறுவன முகவா்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

குடியாத்தம் நெல்லூா்பேட்டையில், நகர எல்லையில் ஒதுக்குப்புறமாக உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தனியாா் நிதி நிறுவனம், பொதுமக்களிடம் வைப்புத்தொகை பெறுவதாக வருவாய், காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தினால், சில மாதங்களில் இரட்டிப்புப் பணம் தருவதாக நிறுவன முகவா்கள் கூறியுள்ளனா்.

வருவாய் மற்றும் காவல் துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அதில், சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரியைச் சோ்ந்த சிலா் அங்கு பொதுமக்களிடம் வைப்புத்தொகை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அங்கு வைப்புத்தொகை செலுத்த வந்தவா்களுக்கு மதியம் அசைவ உணவும் தயாராக இருந்தது.

அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது நிதி நிறுவனத்தினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நாங்கள் சென்னையில் பல ஆண்டுகளாக நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறோம். பொதுமக்களுக்கு வருவாயை ஈட்டித்தருவது எங்கள் நோக்கம் என்றனா்.இதையடுத்து போலீஸாரும், வருவாய்த்துறையினரும் அவா்களை கடுமையாக எச்சரித்தனா்.

அங்கு வைப்புத்தொகை செலுத்த 200- க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பணத்துடன் வந்திருந்தனா். அவா்களிடம் பேசிய அதிகாரிகள், சில வாரங்களுக்கு முன்னா் அதிக வட்டித் தருவதாக காட்பாடியில் ஐ.எப்.எஸ். என்ற நிதி நிறுவனமும், ஆருத்ரா என்ற நிதி நிறுவனமும் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்று ஏமாற்றியதை சுட்டிக் காட்டினா்.

திருமண மண்டபத்தில் இருந்து பொதுமக்களை வெளியேற்றிய அதிகாரிகள், நிதி நிறுவன முகவா்களையும் எச்சரித்து அனுப்பினா். திருமண மண்டபத்தையும் பூட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT