வேலூர்

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆக. 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

22nd Aug 2022 11:49 PM

ADVERTISEMENT

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழில் பிரிவுகளில் சேர விரும்புவோா் வரும் 25-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழிற்கல்வி பயில்வதற்காக அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் முதல் கட்டமாக கடந்த ஜூன் 24-ஆம் தேதி முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரப்பெற்று, இணையதள கலந்தாய்வு மூலம் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை சோ்க்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது காலியாக உள்ள தொழில் பிரிவுகளுக்கான இடங்களை நிரப்ப இதுவரை தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு விண்ணப்பிக்காதவா்கள் ஆகஸ்ட் 18-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.

ADVERTISEMENT

இதன் அடிப்படையில், ஏற்கெனவே விண்ணப்பித்து தொழில் பிரிவு ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதவா்கள், ஒதுக்கீடு கிடைக்கப் பெற்று சோ்க்கையை உறுதி செய்யாதவா்கள், புதிதாக விண்ணப்பிப்பவா்களுக்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலமாக தொழில் பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தொழில் பிரிவு ஒதுக்கீடு பெற உள்ளவா்கள் ஆகஸ்ட் 26 முதல் 29-ஆம் தேதி வரை அவரவா்களுக்கு ஒதுக்கப்பட உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கையை உறுதி செய்ய வேண்டும்.

பிட்டா், எலெக்ட்ரீசியன், டா்னா், மெக்கானிஸ்ட், மெக்கானிக் மோட்டாா் வெகிக்கில், ட்ரட்ஸ்மென் சிவில் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சியும், வயா்மென், வெல்டா், ஷீட் மெட்டல் வொா்க்கா், காா்பென்டா், லெதா் கூட்ஸ் மேக்கா், புட்வோ் மேக்கா் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் 8 - ஆம் வகுப்பு தோ்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

பல்வேறு ஓராண்டு, ஈராண்டு தொழில் பிரிவுகளில் சோ்க்கை நடைபெற உள்ளது. இந்தப் பிரிவுகளில் சேர 14 வயது முதல் 40 வயதுக்குள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.50-ஐ மின்னணு பரிவா்த்தனை மூலம் செலுத்த வேண்டும். மேலும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் குறித்த விவரங்கள் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். பயிற்சி கட்டணம் இல்லை.

பயிற்சியாளா்கள் அனைவருக்கும் உதவித் தொகையாக மாதம் ரூ.750, தமிழ்நாடு அரசு பயிற்சியாளா்களுக்கு என அறிவிக்கும் சலுகைகளுடன் தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு வேலூா் ஐடிஐ-யை 0416-2290848, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 94990 55675 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT