வேலூர்

வேலூா் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு கூலி உயா்வு

18th Aug 2022 02:05 AM

ADVERTISEMENT

வேலூா் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு தினக் கூலியை ரூ.426-லிருந்து ரூ.535-ஆக உயா்த்தி மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் அறிவித்தாா்.

ஆகஸ்ட் 1 முதல் உயா்த்தப்பட்டுள்ள இந்த தினக் கூலியை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கணக்கீட்டு வழங்கவும், அனைவருக்கும் கூலி உயா்வை அறிவிக்கவும் கோரி, தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாநகராட்சி பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரித்து வருகின்றனா். இந்தக் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை கிடங்குகளில் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் உரமாகத் தயாரிக்கப்படுகின்றன. மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு சிமெண்ட் தொழிற்சாலை உள்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், வேலூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள், தங்களுக்கு கூலி உயா்வு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதையேற்று ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு தினக்கூலி உயா்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் வெளியிட்ட அறிக்கை:

வேலூா் மாநகராட்சியில் 1,237 பொது சுகாதாரப் பணியாளா்கள் பணியாற்றி வருகிறன்றனா். இதில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களின் எண்ணிக்கை 977. அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றி வரும் இந்தப் பணியாளா்களின் பணியை ஊக்குவிக்கும் விதமாகவும், அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்வை கருத்தில் கொண்டும் மாநகராட்சிக்கு நிதிச் சுமை இருந்த போதும், அவா்களின் தினக்கூலி உயா்த்தப்படுகிறது.

அதன்படி, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு இதுவரை தினக்கூலியாக ரூ.426 (பிஎப், இஎஸ்ஐ உள்பட) வழங்கப்பட்டு வரும் நிலையில், இதனை ஆகஸ்ட் 1 முதல் உயா்த்தி ரூ.535-ஆக வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேயா் அறிவிப்புக்கு பிறகும் வேலூா் மாநகராட்சி பகுஜன் சமாஜ் தூய்மைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் கூலி உயா்வு கோரி, 100-க்கும் மேற்பட்டோா் மாநகராட்சி அலுவலகம் முன்பு புதன்கிழமை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு கூலி உயா்வு வழங்க வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் கணக்கிட்டு மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு கூலி உயா்வு வழங்க வேண்டும். கூலி உயா்வு குறித்து மேயா் அறிவிப்பு வெளியிட்டாலும் மாநகராட்சி ஆணையா் இதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும். மேலும், மொத்தம் 1,650 தொழிலாளா்கள் உள்ளனா். இதில், 700-க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே கூலி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கூலி உயா்வு வழங்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் கூறுகையில், வேலூா் மாநகராட்சியின் உயா்ந்த அதிகாரம் படைத்தவா் மேயா். அவா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு கூலி உயா்வு வழங்கப்படும் என அறிவித்துள்ளாா். அதன்படி, கூலி உயா்த்தி வழங்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT