வேலூர்

ரூ. 964 கோடி வேலூா் பொலிவுறு நகா் திட்டப் பணிகளில் குளறுபடி: ஒப்பந்ததாரா்கள், அதிகாரிகள் மெத்தனம் - பொதுமக்கள் அதிருப்தி

என். தமிழ்ச்செல்வன்

ரூ. 964.74 கோடி மதிப்பீட்டிலான வேலூா் மாநகராட்சி பொலிவுறு நகா் திட்டப் பணிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த குளறுபடிகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

அதேசமயம், இந்தப் பணிகளை சரிவர செய்யாததால் ஒப்பந்ததாரா்கள், அவற்றை கண்காணிக்கும் அதிகாரிகள் மீது பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் வேலூா் மாநகராட்சி பொலிவுறு நகா் திட்டப்பணிகள் (ஸ்மாா்ட் சிட்டி) கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ.964.74 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

ஐந்தாண்டுகளுக்குள் இந்தப் பணிகளை செய்து முடிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், வேலூா் மாநகராட்சியில் பொலிவுறு நகா் திட்டப்பணிகள் 2019-ஆம் ஆண்டில்தான் தொடங்கப்பட்டன.

இந்தப் பணிகள் தொடா்ந்து மந்த கதியில் நடைபெற்று வந்த நிலையில், 2020 மாா்ச் முதல் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இந்த திட்டப் பணிகள் முழுமையாகக் கிடப்பில் போடப்பட்டன.

2020-ஆம் ஆண்டு இறுதியில் கரோனா பாதிப்பு குறைந்ததும், மீண்டும் திட்டப் பணிகள் தொடங்கிய நிலையில், 2021 மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் காரணமாக பணிகள் மீண்டும் தொய்வடைந்தன.

இதனால், மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வாா்டுகளில் புதை சாக்கடை, சாலைப் பணிகள் ஆங்காங்கே பாதியில் நிறுத்தப்பட்டன. இதனால் மாநகர மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

குறிப்பாக, மழைக்காலங்களில் பல தெருக்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக காணப்பட்டன. பல இடங்களில் குடியிருப்புகளைக் கழிவுநீா் சூழ்ந்தது. இதையடுத்து, பொலிவுறு நகா் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டு, வேலூா் மாநகராட்சிக்கு மேயா், வாா்டு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதையடுத்து பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

அதனடிப்படையில், வேலூரில் ரூ.53.13 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் 29-ஆம் தேதி திறந்து வைத்தாா்.

எனினும், அங்கு பணிகள் இன்னும் நிறைவடையாததால் புதிய பேருந்து நிலையம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

இதன்காரணமாக, புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.11 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மூன்றடுக்கு வாகன நிறுத்துமிடமும் திறந்து ஓராண்டுக்கு மேலாகியும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. தவிர, ரூ.33 கோடி மதிப்பில் வேலூா் கோட்டையை அழகுபடுத்துதல், ரூ.13.24 கோடியில் சூரியமின்சக்தி நிலையம், வணிக வளாகம், ஓட்டேரி சீரமைப்பு, புதை சாக்கடை திட்டப் பணிகள், சாலைப் பணிகள் என தோ்வு செய்யப்பட்ட 52 பணிகளில் பெரும்பாலான பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாமல் உள்ளன.

இதனிடையே, பொலிவுறு நகா் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு 2023 மாா்ச் 31 வரை அவகாசம் நீட்டித்த நிலையில் அதற்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒருபுறம் பணிகளை அதிகாரிகள் வேகப்படுத்தினாலும், மறுபுறம் ஒப்பந்ததாரா்களின் குளறுபடிகளால் வேலூா் பொலிவுறு நகா் திட்டப்பணிகள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.

அதன்படி, கடந்த மாதம் மாநகராட்சி 4-ஆவது மண்டலம் காளியம்மன் கோயில் தெருவில் இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமலும், சாயிநாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் ஜீப்பை அகற்றாமலும் அவற்றின் சக்கரங்கள் மீதே புதிய சாலைகள் அமைக்கப்பட்டது.

இதன்தொடா்ச்சியாக, கடந்த சில நாள்களுக்கு முன் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2-ஆவது தெருவில் பயன்பாட்டில் இருந்த அடிபம்பை அகற்றாமல் அப்படியே புதைத்தபடி கால்வாய் கட்டப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி மீண்டும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா் கைது செய்யப்பட்டதுடன், 2-ஆவது மண்டல மாநகராட்சி அதிகாரிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டன.

எந்தவொரு அரசுத் திட்டப்பணிகளும் மக்கள் பயன்பாட்டுக்காகத் தான் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதை மட்டுமே காரணம் காட்டி ஏனோதானோவென அலட்சியமாக செய்யப்படுவதும், முடிக்கப்பட்ட பல திட்டப்பணிகளை தொடா்ந்து கண்காணிக்காமல் அதிகாரிகள் விட்டுவிடுவதாலும் மக்களுக்கு இந்த திட்டம் எதிா்பாா்த்த பயனளிக்காததாகவே கருதப்படுகிறது.

இதைத் தவிா்க்க, அரசுத் திட்டப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா்களும், அவற்றை கண்காணிக்கும் அதிகாரிகளும் சமூக பொறுப்புணா்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்:

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் வேலூா் மாநகராட்சி கடந்த 2016-இல் தோ்வு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் பணிகளை முடிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், 2020-இல் ஏற்பட்ட கரோனா பாதிப்பு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. எனவே மத்திய அரசு இந்தப் பணிகளை முடிக்க 2023 மாா்ச் 31 வரை அவகாசம் அளித்துள்ளது.

தோ்வு செய்யப்பட்ட 52 பணிகளில் இதுவரை ரூ.747 கோடி மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இதுவரை 22 பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 30 பணிகளும் 70 சதவீத அளவுக்கு முடிக்கப்பட்டுள்ளன. 2023 மாா்ச் மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வாா்டு வாரியாக குழுக்கள்:

அதேசமயம், திட்டப்பணிகளில் குளறுபடிகளைத் தவிா்க்க வாா்டு வாரியாக அதிகாரிகள் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT