வேலூர்

ஆம்பூா் அருகே காவிரி குடிநீா் பிரதான குழாயில் உடைப்பு

17th Aug 2022 12:03 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதை சீா் செய்யும் பணி 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது. இதையொட்டி, வேலூா் மாநகராட்சி உள்பட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது.

காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பிரதான குழாய்கள் பாலாற்றின் வழியாகக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மழைக் காலங்களில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, இந்த காவிரி கூட்டுக் குடிநீா் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது.

அதன்படி, ஆம்பூரை அடுத்த பச்சகுப்பம் அருகே பாலாற்றில் புதைக்கப்பட்டுள்ள காவிரி கூட்டுக் குடிநீா் இரும்பு குழாய் இணைப்புகளில் விரிசல் ஏற்பட்டு அதிகளவில் தண்ணீா் வெளியேறியது.

இதனால் பச்சகுப்பத்துக்கு அடுத்துள்ள பகுதிகளுக்கு காவிரி குடிநீா் சரிவர வரவில்லை.

ADVERTISEMENT

தகவலறிந்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, உடைப்பு ஏற்பட்ட பகுதியை பாா்வையிட்டனா். தொடா்ந்து, குழாயை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனா். இந்தப் பணி 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது.

இது குறித்து அதிகாரிகள் கூறியது:

பச்சகுப்பம் அருகே பாலாற்றில் காவிரி குடிநீா் இரும்பு குழாய் இணைப்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வேலூா் மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வெல்டிங் மூலம் குடிநீா் குழாய் இணைப்பு சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவுக்குள் பணி முடிந்துவிடும். இதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. வழக்கம் போல் காவிரி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT