வேலூர்

காட்பாடி அருகே மின்கம்பி அறுந்ததால் ரயில்கள் நிறுத்தம்

17th Aug 2022 12:02 AM

ADVERTISEMENT

காட்பாடியை அடுத்த சேவூா் ரயில் நிலையம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததால் சென்னை - காட்பாடி வழித்தடங்களில் வந்த ரயில்கள் ஆங்காங்கே பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இதனால், சுமாா் 1.45 மணி நேரம் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

சென்னையிலிருந்து கோவை செல்லும் கோவை விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. மாலை 4.30 மணியளவில் வேலூா் மாவட்டம், சேவூா் ரயில் நிலையத்துக்கு வந்தபோது, திடீரென தண்டவாளத்தின் மேலே செல்லும் மின்கம்பி அறுந்து ரயிலின் மீது விழுந்தது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு ரயில் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது.

தகவலறிந்ததும் காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங்களில் இருந்து 15 போ் கொண்ட ரயில்வே மின் பொறியாளா்கள் குழுவினா் விரைந்து வந்து அறுந்து விழுந்த மின்கம்பியை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனா். அதேசமயம், சென்னையிலிருந்து புறப்பட்டு காட்பாடி வழித்தடத்தில் வந்த திருவனந்தபுரம் விரைவு ரயில், லால்பாக் விரைவு ரயில், திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில், மங்களூரு விரைவு ரயில் ஆகியவை ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. எனினும், காட்பாடி - சென்னை வழித்தடத்தில் அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

மின் கம்பிகள் சீரமைக்கப்பட்டு மாலை 6.15 மணிக்குப் பிறகு அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டன. இதனால், சுமாா் 1.45 மணி நேரம் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT