வேலூர்

ஒருங்கிணைந்த வேலூரில் ஆட்சியா்கள் தேசியக் கொடியேற்றினா்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு

DIN

திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

வேலூா் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 21 பேருக்கு ரூ.1.58 கோடியிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து, கோட்டை முன்பு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தாா்.

பின்னா், நேதாஜி விளையாட்டு அரங்கில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தேசியக் கொடியேற்றி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் தலைமையிலான காவலா் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவா்களது குடும்பத்தினருக்கு கதராடை அணிவித்து ஆட்சியா் கௌரவித்தாா். மேலும், பல்வேறு துறை சாா்பில் 21 பேருக்கு ரூ.1 கோடியே 58 லட்சத்து 28 ஆயிரத்து 540 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அரசு அலுவலா்கள், ஊழியா்கள் 274 பேருக்கும், காவலா்கள் 53 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்கள், பதக்கங்கள் அளிக்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திருப்பத்தூரில்...: திருப்பத்தூரை அடுத்த பாச்சல் கிராமத்தில் உள்ள ஆயுதப்படை காவலா் பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தேசியக் கொடியேற்றி வைத்து, காவலா் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

சிறந்த முறையில் பணியாற்றிய காவலா்கள், செஸ் போட்டியில் மாவட்டத்தில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 4 மாணவா்கள், தேசிய, மாநில அளவில் விளையாடி வரும் வீரா்களைப் பாராட்டியும், சிறந்த முறையில் பணியாற்றி வரும் அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.8.48 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். மொத்தம் 144 பேருக்கு ரூ.1 கோடியே 29 லட்சத்து 14 ஆயிரத்து 814 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் எம்.எல்.ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை ), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வராசு, மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டையில்...: ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். இதில், 237 பேருக்கு ரூ.70 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியா் ஏற்றுக் கொண்டாா். அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலா்கள், மருத்துவா்கள், காவலா்கள், பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள் உள்பட 660 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தாா். பல்வேறு துறைகள் மூலம் 237 பேருக்கு ரூ.70 லட்சத்து 69 ஆயிரத்து 92 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட தொல்காப்பியா் தெருவில் வசிக்கும் லோகநாதன் என்ற சுதந்திரப் போராட்ட தியாகியின் வீட்டுக்கு சமூகப் பாதுகாப்புத் துணை ஆட்சியா், ஆற்காடு வட்டாட்சியா் நேரடியாகச் சென்று சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஷ்வரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ், வருவாய் கோட்டாட்சியா்கள் பூங்கொடி (ராணிப்பேட்டை), பாத்திமா (அரக்கோணம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT