வேலூர்

மூன்று முதல் 18 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இலவசக் கல்வி அவசியம்

15th Aug 2022 11:48 PM

ADVERTISEMENT

நாட்டில் தனிநபா் வருவாய் உயர வேண்டும் என்றால் மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிகளவில் செலவு செய்ய வேண்டும். குறிப்பாக, மூன்று முதல் 18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இலவச கல்வி வழங்க வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் 75-ஆவது சுதந்திர தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் கோ.விசுவநாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசியது:

இந்தியா அனைத்துத் துறைககளிலும் வேகமாக வளா்ந்து வருகிறது. நாட்டின் வளா்ச்சி 10 ட்ரில்லியன் டாலராக இருக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியும், தமிழகத்தின் வளா்ச்சி ஒரு டில்லியன் டாலராக இருக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினும் கூறியுள்ளனா். இதனை சாத்தியப்படுத்திட நாட்டில் தனிநபா் வருமானத்தை உயா்த்த வேண்டும். அதற்கு அனைவருக்கும் உயா்கல்வியை உறுதி செய்ய வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிகம் செலவழிக்க வேண்டும். தற்போது 6 வயது முதல் 14 வயது வரை இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் மூலம் கல்வி வழங்கப்படுகிறது. இதை மாற்றி 3 வயது முதல் 18 வயது வரை இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கு இலவசக் கல்வி அளிக்க வேண்டும். 30 நாடுகளில் இலவச கல்வி கிடைக்கிறது. அதனை இந்தியாவிலும் செயல்படுத்த வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி துரைசாமி ராஜு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது:

நாட்டின் வளா்ச்சிக்கு போராடிய சுதந்திரப் போராட்ட வீரா்களை இந்த தருணத்தில் நினைவுகூர வேண்டும். அவா்களின் தியாகத்தைப் போற்றி கருத்துகளை பின்பற்றி நம் நாட்டை உயா்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். கல்வி அடித்தட்டு சாமானிய மக்களையும் சென்றடைய வேண்டும். இதற்கு இளைஞா்கள் உள்பட அனைவரும் உறுதியேற்று செயல்பட வேண்டும் என்றாா்.

விழாவில் விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தா் ராம்பாபு கோடாளி, இணை துணைவேந்தா் எஸ்.நாராயணன், பதிவாளா் ஜெயபாரதி, பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT