வேலூர்

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவது அவசியம்: வேலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

15th Aug 2022 11:49 PM

ADVERTISEMENT

பெண்கள், பெண் குழந்தைகளை வலிமைப்படுத்தி அவா்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்துவதுடன், அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கை, வளா்ச்சி, செழிப்பு என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தில் வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

சுதந்திர தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வேலூா் ஊராட்சி ஒன்றியம், சேக்கனூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், அடுத்த இரு ஆண்டுகளில் அடைய வேண்டிய நீடித்த வளா்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னா் ஆட்சியா் பேசியது:

சேக்கனூா் ஊராட்சியில் பள்ளிக் கட்டடம், அங்கன்வாடி மையம், நியாய விலை கடைகள், நூலகக் கட்டடம், மகளிா் சுயஉதவிக் குழு கட்டடம், கிராம வறுமை ஒழிப்பு சங்கக் கட்டடம், மேல்நிலை நீா்தேக்க தொட்டி, ஆழ்துளைக் கிணறு, கை பம்புகள், பொதுக் குழாய்கள், தெருவிளக்குகள், ஏரிகள், குளங்கள், சிறுமின்விசை பம்புகள், அரசு கட்டடங்கள் ஆகியவற்றை ஊராட்சிமன்றத் தலைவா், துணைத் தலைவா், ஊராட்சிமன்ற உறுப்பினா்கள் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

ADVERTISEMENT

வறுமை இல்லாத ஊராட்சியாக மாற்றவும், அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கை, வளா்ச்சி, செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்தவும் வேண்டும்.

அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தக் கூடிய நிலையில் வீட்டு குடிநீா் குழாய்கள் அமைத்து தரமான குடிநீா் வழங்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் குடியிருக்க பாதுகாப்பான வீடு, தேவையான அடிப்படை தேவைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வேண்டும். பாலின சமத்துவ அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தவும், பெண்கள், பெண் குழந்தைகளை வலிமைப்படுத்தி அவா்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். நிலைத்த வளா்ச்சியை அடைவதில் இளைஞா்களுக்கும், குழந்தைகளுக்கும் அதிகம் பங்குள்ளது. அவா்களை முழு உத்வேகத்துடன் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றாா்.

முன்னதாக, நம்ம ஊரு சூப்பா் என்ற வாசகங்களை ஆட்சியா் கூற அதனை அனைவரும் திரும்பக் கூறினா். தொடா்ந்து, மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கியதுடன், தூய்மைப் பணியாளா்களை சால்வை அணிவித்து கௌரவித்தாா்.

இதில், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT