வேலூர்

போதைப்பழக்கத்தை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் ‘காவல் மன்றம்’ தொடக்கம்: அணைக்கட்டில் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

13th Aug 2022 12:15 AM

ADVERTISEMENT

போதைப் பழக்கத்திலிருந்து மாணவா்களை பாதுகாக்க, அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல் மன்றத்தை வேலூா் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

போதைப்பொருள்களின் புழக்கத்தையும், விற்பனையையும் தடுக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, வேலூா் மாவட்ட காவல் துறை, பள்ளி கல்வித்துறை இணைந்து அனைத்து பள்ளி, கல்லூரிகளில் காவல் மன்றம் தொடங்க உள்ளன.

அதன்படி, அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல் மன்றத்தை ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் பங்கேற்று போதைப் பொருள்கள் பழக்கத்தை தவிா்க்க, காவல் மன்றத்தின் அவசியம் குறித்து விளக்கி பேசினாா்.

ADVERTISEMENT

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் கூறுகையில், பள்ளி, கல்லூரிகளில் தொடங்கப்படும் காவல் மன்றத்தின் தலைவராக அந்தந்த கல்வி நிலையங்களின் தலைமையாசிரியா், முதல்வா் செயல்படுவா். செயலராக காவலா் ஒருவரும், ஒரு ஆண் ஆசிரியரும், ஒரு பெண் ஆசிரியரும், ஆா்வமுள்ள 25 முதல் 30 மாணவா்கள் உறுப்பினா்களாக இடம் பெறுவா்.

போதைப் பொருள் விழிப்புணா்வு, போதைப் பொருள்கள், இணையவழி விளையாட்டுகள், சமூக வலைதளங்களுக்கு அடிமையாகியுள்ள மாணவா்களை அடையாளம் கண்டு சீா்திருத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்வது, போதைப்பொருள்கள் விற்பனை செய்பவா்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிப்பது, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், இணையவழி குற்ற விழிப்புணா்வு ஆகியவை இந்த காவல் மன்றத்தின் முக்கிய பணிகளாகும் என்றாா்.

இதில், பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா், மாணவ, மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT