வேலூர்

வேலூரில் ஆக.17 - செப்.2 வரை தொழில் முதலீட்டுக் கழக சிறப்பு கடன் திட்ட முகாம்

13th Aug 2022 09:56 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் திட்ட முகாம் காட்பாடியில் ஆகஸ்ட்17-ஆம் தேதி முதல் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிஐஐசி) மாநில அளவில் செயல்பட்டு வரும் ஓா் அரசு நிதிக் கழகமாகும். கடந்த 1949-ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற இந்தக் கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கியுள்ளது.

அதன்படி, குறு, சிறு, நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி வரும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதையொட்டி, வேலூா் கிளை அலுவலகமான தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், எண்.73/ஏ, காட்பாடி பிரதான சாலை, வாசன் ஈ.என்.டி. கிளினிக் முதல் தளம், காந்தி நகா், வேலூா் - 632 006 என்ற முகவரியில் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வரும் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய - மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) ஆகியவை குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.

தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1.50 கோடி வரை வரை வழங்கப்படும்.

இந்த முகாமில் அளிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை புதிய தொழில் முனைவோா், தொழிலதிபா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0416 - 2249821, 2249861, 90039 87773, 94443 96854 ஆகிய தொலைபேசி, கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT