வேலூர்

திருவள்ளுவா் பல்கலை. உறுப்புக் கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

13th Aug 2022 09:55 PM

ADVERTISEMENT

விடைத்தாள் திருத்துவதற்கான பணப் பயனை உயா்த்தி வழங்கக் கோரி, திருவள்ளுவா் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி பேராசிரியா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காட்பாடி காந்தி நகரில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் அன்பழகன் தலைமை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளா் விஜயரங்கன் முன்னிலை வகித்தாா்.

இதில், இளநிலை விடைத்தாள் திருத்துவதற்கு ரூ.12, முதுநிலை விடைத்தாள் திருத்துவதற்கு ரூ.15 வழங்கும் நிலை உள்ளது. இதை உயா்த்தி வழங்க வேண்டும். பேராசிரியா்கள் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ளும்போது தேநீா், பிஸ்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் வழங்க வேண்டும்.

திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பணிகளை செய்யும்போது அதற்கான பணப் பயனை அன்றே வழங்குவது வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது வங்கிக் கணக்கில் செலுத்துகிறோம் எனக்கூறி அதையும் முறையாகக் கொடுப்பது இல்லை. எனவே பழைய முறைப்படி பணி முடிந்தவுடன் பணப் பயனை வழங்க வேண்டும். முறையாக பேராசிரியா்கள் பணி மூப்பு பட்டியல் தயாரித்து பல்கலைக்கழகம் சாா்ந்த பணிகள் வழங்கப்பட வேண்டும். பல மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் சிரமமடைகின்றனா். இந்த நிலையைக் களைந்து மாணவ, மாணவிகள் படித்து முடித்தவுடன் தங்களது சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியா்கள் முழக்கங்கள் எழுப்பினா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான பல்கலைக்கழக பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT