வேலூர்

போதைப் பொருள் கடத்திய 80 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

13th Aug 2022 09:56 PM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தியதாக இதுவரை 80 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் ஆகியோா் தெரிவித்தனா்.

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் ஆகியோா் தமிழக - ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை இரவு தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வந்த வாகனங்களை நிறுத்தி, அவா்கள் சோதனை செய்தனா். தவிர, ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வந்த பேருந்துகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

பின்னா், ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் செய்தியாளா்களிடம் கூறியது:

ADVERTISEMENT

சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் மாநாட்டில் போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனையைத் தடுக்க முதல்வா் அறிவுரை வழங்கியிருந்தாா். அதன்படி, வேலூா் மாவட்டத்திலுள்ள தமிழக - ஆந்திர எல்லையான வி.கோட்டா, சயனகுண்டா, பரதராமி, காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, முத்தரசிகுப்பம் ஆகிய 5 இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த 3 நாள்களாக வேலூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தி, மாணவா்களிடையே போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், வேலூா் மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு போதைப் பொருள்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மருந்து கடைகாரா்களும் போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

அரசுப் பேருந்துகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுகிறது. இதைத் தடுக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவா்கள் நடத்துநா்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளனா்.

பயணிகள் ஏறும்போது அவா்கள் வைத்திருக்கும் பைகளை சோதனை செய்ய வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருந்தால் அருகிலுள்ள காவல் நிலையங்களில் புகாா் அளிக்க வேண்டும்.

போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க சட்டம் -ஒழுங்கு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். காட்பாடி வழியாக வரும் ரயில்களில் ரயில்வே போலீஸாா் சோதனை நடத்தி கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்தும், கடத்தி வந்தவா்களைக் கைது செய்தும் வருகின்றனா். இதுவரை கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 80 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றனா்.

அப்போது, காட்பாடி வட்டாட்சியா் ஜெகதீஸ்வரன், அதிகாரிகள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT