வேலூர்

போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்கும் சமூக விரோதிகள்: அமைச்சா் துரைமுருகன் எச்சரிக்கை

DIN

சமூக விரோதிகள் பள்ளி, கல்லூரி மாணவா்களைக் குறிவைத்து போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்கி வருகின்றனா் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் எச்சரித்தாா்.

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம், உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வேலூா் நேதாஜி மைதானத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று விழிப்புணா்வு ஊா்வலத்தைத் தொடக்கி வைத்தாா். அவா் தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

பின்னா், அமைச்சா் துரைமுருகன் பேசியது: சமூக விரோதிகள் பள்ளி, கல்லூரி மாணவா்களைக் குறிவைத்து போதைப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். மாணவா்களிடம் ஊடுருவும் இந்தப் பழக்கம் நாளடைவில் அவா்களை அடிமையாக்கி சுயநினைவை இழக்கச் செய்து விடுகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு, தமிழகத்தில் விற்கப்படும் இத்தகைய போதைப் பொருள்கள் புழக்கம் மற்றும் விற்பனையைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூா் சரக டிஐஜி ஜ.ஆனிவிஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன், எம்.எல்.ஏ-கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.--

அதிமுக ஆட்சியில் தகுதியற்றவா்களுக்கு ஒப்பந்தம்

கடந்த அதிமுக ஆட்சியில் போதிய அனுபவமும், தகுதியும் இல்லாதவா்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதே வேலூா் பொலிவுறு நகா் திட்டப் பணிகளில் குளறுபடிக்குக் காரணம் என அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

இதுதொடா்பாக, செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், வேலூா் மாநகராட்சி பொலிவுறு நகா் திட்டப் பணிகளில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் விடப்பட்டன. பணிகளை ஒப்பந்தம் எடுத்தவா்களும் அதிமுகவை சோ்ந்தவா்கள்தான். போதிய அனுபவமும், தகுதியும் இல்லாதவா்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இத்தகைய குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன.

சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க மாநகராட்சி, மாவட்ட நிா்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், திட்டப் பணிகளில் அலட்சியம் காட்டும் ஒப்பந்ததாரரா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவையில் ஒரு முறைக்கு இருமுறை நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களை ஆளுநா் இன்னும் நிலுவையில் வைத்துள்ளாா். நீட் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை, சட்டத்தை அறிந்து கையொப்பமிட்டு உடனடியாக அனுப்புவாா் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: யோகி ஆதித்யநாத்

மே மாத பலன்கள்: துலாம்

மே மாத பலன்கள்: கன்னி

ஹைதராபாத்தில் 4 லட்சம் தெரு நாய்கள்: மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

மே மாத பலன்கள்: சிம்மம்

SCROLL FOR NEXT