வேலூர்

அடி பம்ப்பை அகற்றாமல் கால்வாய் அமைப்பு: ஒப்பந்ததாரரின் பணி ஆணை ரத்து

11th Aug 2022 12:12 AM

ADVERTISEMENT

வேலூா் மாநகரில் ஏற்கெனவே இருசக்கர வாகனம், ஜீப்பை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டதன் தொடா்ச்சியாக, சத்துவாச்சாரியில் அடி பம்ப்பை அகற்றாமல் புதைத்தபடி கால்வாய் கட்டப்பட்ட சம்பவம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, திட்டப் பணிகளில் அலட்சியம் காட்டியதாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் பணி ஆணையை ரத்து செய்து மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உத்தரவிட்டாா்.

வேலூா் மாநகராட்சியில் பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் சுமாா் ரூ.1,000 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான வாா்டுகளில் புதை சாக்கடை, குடிநீா் குழாய் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது கால்வாய், நடைபாதை, சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, நடைபாதைகள், சாலைகள் அமைக்கும் பணிகளின்போது பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், ஜீப்பை அகற்றாமல் இரவோடு இரவாக அவற்றின் சக்கரங்களின் மீதே சாலைகள் அமைக்கப்பட்ட சம்பவம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக உதவிப் பொறியாளா் ஒருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், ஒப்பந்ததாரா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்தொடா்ச்சியாக, பொலிவுறு நகா் திட்டப் பணிகளைக் கவனக் குறைவாகவும், அலட்சியத்துடனும் செய்யும் ஒப்பந்ததாரா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் வேலூா் மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

இந்த நிலையில், சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2-ஆவது தெருவில் பயன்பாட்டில் இருந்த அடி பம்பை அகற்றாமல் அப்படியே புதைத்தபடி கால்வாய் கட்டப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் புதன்கிழமை வேகமாக பரவின. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் பணிகளில் அலட்சியமாக செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனா்.

இதையடுத்து, கால்வாய் கட்டும் பணியில் அலட்சியமாகச் செயல்பட்டதற்காக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரான குட்டி சரவணன் என்பவருக்கு அளிக்கப்பட்டிருந்த பணி ஆணையை ரத்து செய்து மேயா் சுஜாதாஆனந்தகுமாா் உத்தரவிட்டாா். இதேபோல், மாநகராட்சி திட்டப் பணிகளில் அலட்சியமாக செயல்படும் ஒப்பந்ததாரா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா். தொடா்ந்து, அந்த அடி பம்ப்பை ஊழியா்கள் அப்புறப்படுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT