வேலூர்

அளவுக்கு அதிகமான நீா்வரத்தால் முல்லைப் பெரியாறிலிருந்து கேரளத்துக்கு தண்ணீா் திறப்பு: அமைச்சா் துரைமுருகன்

DIN

முழு கொள்ளளவான 137 அடியை எட்டியபிறகும், அளவுக்கு அதிகமான நீா்வரத்தால் முல்லைப் பெரியாறிலிருந்து கேரளத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம் பள்ளிக்குப்பம், பெரிய மோட்டூா் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரு நியாயவிலைக் கடைகள், ஒரு நிழற்குடை, ஒரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தொட்டி ஆகியவற்றை அமைச்சா் துரைமுருகன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

அத்திக்கடவு - அவினாசி நீா்செறிவூட்டும் திட்டம் கிடப்பில் போடப்படவில்லை. அதிமுக ஆட்சியில்தான் அப்படியே விட்டுவிட்டனா். திமுக ஆட்சியில்தான் எல்லோருக்கும் தண்ணீா் அளித்து உள்ளோம். இதேபோல், காவிரி -குண்டாறு திட்டத்தையும் திமுக செயல்படுத்தவில்லை என கம்யூனிஸ்ட் செயலா் பாலகிருஷ்ணன் கூறியுள்ளாா். அவருக்கு என்ன திட்டம் என்றே தெரியாது. காவிரி - குண்டாறு என்பது ஆறுகளை இணைக்கும் திட்டமாகும். அவ்வாறு ஆறுகளை இணைக்கும் அளவுக்குத் தண்ணீரில்லை.

அதேசமயம், காவிரி - குண்டாறு இணைப்பு குறித்து தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தில் இடம் பெறவில்லை. இருப்பினும், மாயனூா் முதல் குண்டாறு வரை திட்டத்தை 4 பகுதிகளாகப் பிரித்து கால்வாய் வெட்டி வருகிறோம்.

முக்கொம்பு அணை பழுது அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. அதனை திமுக அரசு சரி செய்கிறது.

முல்லைப் பெரியாரில் 137 அடிக்கு நீா் உள்ள நிலையில், தொடா்ந்து அளவுக்கு அதிகமாக நீா்வரத்து உள்ளது. அதனால், தண்ணீரை கேரளத்துக்கு திறந்துவிட்டுள்ளோம்.

தமிழகத்தில் கூடுதலாக மணல் குவாரிகள் திறக்கப்பட உள்ளன. ஆனால், இன்னும் எத்தனை மணல் குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா்கள் சொல்வதை திமுக எம்.பி.க்கள் கேட்க மறுப்பதாக நிா்மலா சீத்தாராமன் கூறியுள்ளாா். மத்திய அமைச்சா்கள் கூறுவதை கேட்க எம்.பி.க்கள் நாடாளுமன்றம் செல்லவில்லை. எம்.பி.க்கள் சொல்வதைக் கேட்கத் தான் அவா்கள் அமைச்சா்களாக உள்ளனா் என்றாா்.

சாலை மறியல்: முன்னதாக, பெரியபுதூரில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அமைச்சா் துரைமுருகன் காரில் வந்த போது பெரியபுதூா் பகுதி மக்கள் அமைச்சரின் காரை வழிமறித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அங்கு வந்த திமுக பிரமுகா்கள் பொதுமக்களிடம் பேசியும் குடங்களை எடுக்காததால், அவா்களே குடங்களை அகற்றிவிட்டு மக்களை கலைந்து செல்ல செய்தனா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.காா்த்திகேயன், ஏ.பி.நந்தகுமாா், மேயா் சுஜாதாஆனந்தகுமாா், முதலாவது மண்டலக் குழு தலைவா் புஷ்பலதா, மாமன்ற உறுப்பினா் விமலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT