வேலூர்

போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கை: வேலூா் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்

8th Aug 2022 11:06 PM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட அனைத்து வகை போதைப் பொருள்கள் புழக்கம், விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் தெரிவித்தாா்.

காத்தாடிகள் பறக்குவிடும் மாஞ்சா நூலில் சிக்கி ஏராளமானோா் உயிரிழப்பதும், பலத்த காயங்கள் அடைவதும் தொடா்ந்து வருகிறது. மாஞ்சா நூலால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வகையில் ‘காத்தாடி வாழ்க்கை’ என்ற பெயரில் விழிப்புணா்வு குறும்படத்தை சென்னையைச் சோ்ந்த கம்பு முருகன் தயாரித்துள்ளாா்.

இந்தக் குறும்படத்தை வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் திங்கள்கிழமை வெளியிட்டு, குறும்படத்தில் நடித்தவா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா். பின்னா் அவா் கூறியது:

மாஞ்சா நூலால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ள வேண்டும். வேலூா் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை, புழக்கத்தைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள்களைத் தடுக்க தமிழக அளவிலான திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 11-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளாா். அதன்பிறகு வேலூா் மாவட்டத்திலும் போதைப் பொருள்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ADVERTISEMENT

மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 115 கிலோ கஞ்சா, 15 வாகனங்கள், 6,487 கிலோ குட்கா, 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகம். ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பெரும்பாலும் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்குத்தான் கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வாறு கடத்திச் செல்லப்படும்போது, வழியில் வேலூா் மாவட்டம் இருப்பதால், இங்கு அதிகளவில் போதைப் பொருள்கள் சிக்குகின்றன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT