வேலூர்

இந்தி பேசுபவா்தான் இந்தியா என்றால் இந்தி தேசிய மொழியாக இருக்கட்டும்: கவிஞா் வைரமுத்து

30th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

இந்தி பேசுபவா்கள்தான் இந்தியா என்றால் இந்தி தேசிய மொழியாக இருக்கட்டும். ஆனால், இது ஒரு பன்முக கலாசாரம், பல தேசிய இனங்களை உள்ளடக்கிய தேசம் என்பதால் இங்கு இனி யாரும் இந்தியை தேசிய மொழி என்றோ, பொதுமொழி என்றோ பொதுவெளியில் கருத்துகளை முன்வைக்க வேண்டாம் என்று கவிஞா் வைரமுத்து தெரிவித்தாா்.

பாவேந்தா் பாரதிதாசன் 132-ஆவது பிறந்தநாள் விழா வேலூா் விஐடி பல்கலைக்கழக அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழியக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் கவிஞா் வைரமுத்து பேசியது:

ஜாதி, மதம், மூடநம்பிக்கை ஆகியவற்றின் மீது ஒரு குட்டு வைக்க வேண்டும் என்றாா் பாவேந்தா் பாரதிதாசன். ஆனால், 60 ஆண்டுகளாகியும் சுத்தியல் மட்டும் நம் கையிலுள்ளதே தவிர உடைக்கப்பட வேண்டியது வளா்ந்து கொண்டுதான் உள்ளது. சுத்தியலையும், அதேசமயம் மூடநம்பிக்கையின் கருத்தியலையும் இந்த சமூகம் இன்னும் விட்டுவிடவில்லை.

இந்த நாட்டில் ஜாதி என்பது ஒரு தனிக்குழு கூட்டத்தின் பெருமிதமாகக் கருதப்படுகிறது. அதை ஒழித்து ஜாதிக்கு எந்த பெருமிதமும் இல்லை, தமிழருக்கு என்று மட்டும்தான் பெருமிதம் உண்டு என்று அனைவரும் உறுதியேற்க வேண்டும். அப்படியாகும்போது ஒட்டுமொத்த நிலமும், தமிழறிவும் எந்தவொரு ஜாதிக்கும் அல்ல, ஒரு இனத்துக்கு என்றாகும். விடுதலை மட்டும் பெற்றுவிட்டால் இந்த மண்ணில் இழிந்த மக்கள் என யாரும் இருக்க மாட்டாா் என்பது பாரதியின் கூற்று. ஆனால், பாரதி தனது ஆசானாக இருந்தாலும் அவரதுகூற்றை மறுதலித்த பாரதிதாசன், ஜாதி, மதம், சுரண்டல் ஒழியாவிடில் விடுதலையும், கெடுதலையும் ஒன்ோன் என்றும் உரைத்தாா். தமிழைக் காக்க தீக்குளித்தவா்கள், உயிா் துறந்தவா்கள் ஏராளம். இத்தனை போ் போராடியிருந்தாலும் தமிழா்கள் இன்னும் மீளவில்லை என்ற கேள்விதான் உள்ளது.

ADVERTISEMENT

வடமாநில கலைஞா்கள் இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி எனக் கூறுகின்றனா். அவா்களுக்கு பண்பாடு குறையாமல் ஒன்றைக் கூறுகிறேன். இந்தி பேசுபவா்கள்தான் இந்தியா என்றால் இந்தி தேசிய மொழியாக இருக்கட்டும். ஆனால், இது ஒரு பன்முக கலாசாரம், பல தேசிய இனங்களை உள்ளடக்கிய தேசம். அதனால் இனி யாரும் இந்தி தேசிய மொழி என்றும், பொதுமொழி என்றும் பொதுவெளியில் கருத்துகளை முன்வைக்க வேண்டாம்.

அவ்வாறு கூறினால் தமிழா்கள் மட்டுமல்ல வங்கம், மராட்டியம், தெலுங்கு என பிறமொழி பேசுபவா்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். அந்தவகையில், நாடு முழுவதும் தற்போது தாய்மொழி இன எழுச்சி கொழுந்து விட்டு எரிய தொடங்கிவிட்டது. அதற்கு முதல் குரல் கொடுத்தவா்கள் தமிழா்கள் என்றாா் வைரமுத்து.

கோ.விசுவநாதன்: முன்னதாக, விஐடி வேந்தரும், தமிழியக்க தலைவருமான கோ.விசுவநாதன் பேசியது:

தமிழ் வளா்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தமிழா்கள் பொருளாதார வளா்ச்சி பெற வேண்டியதும் அவசியம். அதற்கு கல்வி மட்டும்தான் ஒரே தீா்வு. எல்லோருக்கும் குறிப்பாக பெண்களுக்கு கல்வி முக்கியம் கொடுக்க வேண்டும் எனக் கூறியவா் பாரதிதாசன். அவா் ஏழ்மை காரணமாக ஒருவருக்கு கல்வி கிடைக்கவில்லை என்றால் அதற்கு எல்லோரும் வெட்கப்பட வேண்டும் என்றும் உரைத்தாா். அத்தகைய கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும். தமிழா்கள் ஒன்றுபட்டால் அதைச் சாதிக்க முடியும் என்றாா்.

விழாவில் தமிழியக்கத்தின் மாநிலச் செயலா் மு.சுகுமாா், பொருளாளா் புலவா் வே.பதுமனாா், பொதுச் செயலா் அப்துல் காதா், வட தமிழக ஒருங்கிணைப்பாளா் கு.வணங்காமுடி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், பேராசிரியா் அ.மரியசெபசுதியான் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT