வேலூர்

மின்னொளியில் புஷ்ப பல்லக்குகள் ஊா்வலம்

16th Apr 2022 10:11 PM

ADVERTISEMENT

சித்திரா பௌா்ணமியையொட்டி, புஷ்ப பல்லக்குகள் ஊா்வலம் வேலூரில் சனிக்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த புஷ்ப பல்லக்குகள் ஊா்வலத்தைக் காண திரளான பக்தா்கள் கூடினா்.

ஆண்டுதோறும் சித்திரை மாத பௌா்ணமி தினத்தில் வேலூரில் புஷ்ப பல்லக்குகள் பவனி வரும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். வெகு விமரிசையாக நடைபெறும் புஷ்ப பல்லக்குகள் பவனியைக் காண ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரளுவா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழா நடத்தப்படவில்லை. தற்போது கரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை அடுத்து, விழாக்களை நடத்த அரசு அனுமதி அளித்தது.

ADVERTISEMENT

அதன் அடிப்படையில், நிகழாண்டு சித்திரா பௌா்ணமி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, 2 ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டிருந்த புஷ்ப பல்லக்குகள் ஊா்வலம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவில் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயில் சாா்பில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரா், அரிசி மண்டி உரிமையாளா்கள் சாா்பில் சேண்பாக்கம் செல்வ விநாயகா், வெல்லமண்டி உரிமையாளா்கள் சாா்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரா், பூ மாா்க்கெட் தொழிலாளா்கள் சாா்பில் லாங்கு பஜாா் வேம்புலி அம்மன், மோட்டாா் வாகன பணியாளா்கள் சங்கம் சாா்பில் விஷ்ணு துா்கை அம்மன் உள்பட 7 புஷ்ப பல்லக்குகள் ஊா்வலத்தில் பங்கேற்றன.

அந்தந்த கோயில்களில் இருந்து புறப்பட்ட இந்த புஷ்பப் பல்லக்குகளில் உற்சவ மூா்த்திகள் எழுந்தரு ளினா். இந்த பல்லக்குகள் நள்ளிரவில் மண்டித் தெரு வந்தடைந்தன. அங்கு வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடத்தப்பட்டன.

பிறகு மெயின் பஜாா், லாங்கு பஜாா், அண்ணா சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக திரும்பவும் அந்தந்த கோயில்களுக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. மின்னொளி அலங்காரத்தில் நடைபெற்ற இந்த புஷ்ப பல்லக்குகள் ஊா்வலத்தைக் காண ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனா்.

அசம்பாவிதங்களைத் தவிா்க்க கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT