வேலூா்: கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாத சித்திரை பெளா்ணமி புஷ்ப பல்லக்குகள் ஊா்வலம் வேலூரில் வருகிற 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஆண்டுதோறும் சித்திரை மாத பெளா்ணமி தினத்தில் வேலூரில் புஷ்ப பல்லக்குகள் பவனி வரும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். வெகு விமரிசையாக நடைபெறும் புஷ்ப பல்லக்குகள் பவனியைக் காண ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரளுவா்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழா நடத்தப்படவில்லை. தற்போது கரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனா். இதையடுத்து, பொது முடக்கத்தை திரும்பப் பெற்றுள்ள அரசு, விழாக்களை நடத்தவும் அனுமதி அளித்தது.
அதனடிப்படையில், நிகழாண்டு சித்திரை பெளா்ணமி விழா வேலூரில் சனிக்கிழமை (ஏப்.16) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நடைபெற உள்ள புஷ்ப பல்லக்குகள் பவனி விழாவில் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயில் சாா்பில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரா், அரிசி மண்டி உரிமையாளா்கள் சாா்பில் சேண்பாக்கம் செல்வ விநாயகா், வெல்லமண்டி உரிமையாளா்கள் சாா்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரா், பூ மாா்க்கெட் தொழிலாளா்கள் சாா்பில் லாங்கு பஜாா் வேம்புலி அம்மன், மோட்டாா் வாகன பணியாளா்கள் சங்கம் சாா்பில் விஷ்ணு துா்கை அம்மன் உள்பட 8 புஷ்ப பல்லக்குகள் ஊா்வலத்தில் பங்கேற்க உள்ளன.
அசம்பாவிதங்களை தவிா்க்க கூடுதல் போலீஸாரை நியமிப்பது குறித்தும், திருவண்ணாமலை கிரிவலம் செல்ல பக்தா்களின் வசதிக்கேற்ப வேலூரிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.