வேலூா்: அணைக்கட்டு ஒன்றியத்தில் மலைப்பகுதியிலுள்ள பீஞ்சமந்தை கிராமத்துக்கு தாா்ச் சாலை அமைக்க ரூ. 5.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டும், இதுவரை அந்த சாலைகள் அமைக்கப்படவில்லை. தற்போது புதிதாக குக்கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளை தாா்ச் சாலைகளாக மாற்ற நில அளவைப் பணிகள் நடந்து வரும் நிலையில், கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணியையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட பீஞ்சமந்தை, பாலாம்பட்டு, ஜாா்தான்கொல்லை ஆகிய ஊராட்சிகள் மலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. இவற்றிலுள்ள 72 குக்கிராமங்களில் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனா்.
இந்த ஊராட்சிகளுக்கு உள்பட்ட குக்கிராமங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு வனத் துறை சாா்பில், மண் சாலை அமைக்கப்பட்டது. அதன்பிறகு, அந்த கிராமங்களுக்கு தாா்ச் சாலைகள் அமைக்கப்படாததால், மலைவாழ் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா். மலைக் கிராமங்களுக்கு தாா்ச் சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அவா்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த வந்தனா்.
இந்த கோரிக்கையை ஏற்று வனத் துறை சாா்பில், பாரதப் பிரதமரின் கிராமச் சாலை இணைப்புத் திட்டத்தின் கீழ், முத்துகுமரன் மலை முதல் பீஞ்சமந்தை கிராமம் வரையிலான 6.55 கி.மீ. தூரத்துக்கு ரூ. 5.11 கோடி மதிப்பில் தாா்ச் சாலை அமைக்க கடந்த 2021-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
அதற்குள் சட்டப்பேரவைத் தோ்தல் வந்ததை அடுத்து, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டதுடன், சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இந்த பிரதான சாலை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாததால் கூடுதல் நிதி பெற்று பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மூன்று ஊராட்சிகளுக்கும் செல்லும் பிரதான சாலையில் இருந்து குக்கிராமங்களுக்குச் செல்லக்கூடிய சாலைகள் அனைத்தும் மண் சாலைகளாகவே இருந்து வருகின்றன. அவற்றையும் தாா்ச் சாலையாக மாற்றித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக பீஞ்சமந்தை, பாலாம்பட்டு, ஜாா்தான்கொல்லை ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட குக்கிராமங்களுக்குச் செல்லக்கூடிய சாலைகளை நில அளவை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இந்த ஊராட்சிகளிலுள்ள குக்கிராமங்களுக்குச் செல்லக்கூடிய 6 முக்கிய சாலைகள் நில அளவை செய்யப்பட்டன. தொடா்ந்து, அவற்றுக்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்படும் என்றும், தேவையான நிதி ஒதுக்கீடு பெறப்பட்ட பிறகு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அணைக்கட்டு ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
மலைக் கிராமங்களுக்கு சாலைகள் அமைக்கப்படுவதன் மூலம், பள்ளி, கல்லூரிக்கு மாணவா்கள், மருத்துவ சேவைக்காக நோயாளிகள் நகா்ப்புற பகுதிகளுக்கு வந்து செல்ல எளிதாகும். தவிர, மலைப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்கள், பழ வகைகள், தேன், காய்கறிகளை சந்தைப்படுத்தவும், உற்பத்தி செய்யப்படும் விளை பொருள்களை உரிய நேரத்தில் நல்ல விலைக்கு விற்கவும் வாய்ப்பு ஏற்படும்.
எனவே, புதிதாக குக்கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளை தாா்ச் சாலைகளாக மாற்றவும், கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணியை நிறைவேற்றவும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.