வேலூர்

பழைய பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

9th Apr 2022 10:23 PM

ADVERTISEMENT

வேலூா் கொணவட்டம் பகுதியிலுள்ள பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் பழைய பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியைச் சோ்ந்தவா் முனீா். இவா், வேலூா் மாவட்டம், கொணவட்டம் பொன்னியம்மன் கோவில் வீதியில் ரபீக் அகமது என்பவருக்குச் சொந்தமான இடத்தில் பழைய பிளாஸ்டிக் கிடங்கு நடத்தி வருகிறாா். இந்தக் கிடங்கில் பழைய பிளாஸ்டிக் கழிவுகளை அரைத்து பொடியாக்கி அதை ஏற்றுமதி செய்து வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அரைவை செய்வதற்காக ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. ௌ

இந்த நிலையில், பிளாஸ்டிக் கிடங்கில் சனிக்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகள் மீது பற்றிய தீ வேகமாக பரவியதுடன் புகை மண்டலமாக மாறியது.

இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் வேலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். காட்பாடியில் இருந்தும் கூடுதலாக தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. சுமாா் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

ADVERTISEMENT

தீ விபத்தில் கிடங்கில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், இயந்திரங்கள் உள்பட சுமாா் ரூ.15 லட்சம் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து, வேலூா் வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பழைய பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால், அந்தப் பகுதி முழுவதும் நச்சுப் புகை பரவியது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT