தனது நிலத்தை அளந்து கொடுக்க ஆண்டுக்கணக்கில் தாமதிப்பதாகக் கூறி, பிளேடால் தனது கையை அறுத்துக் கொள்ள முயன்ற நில அளவை ஊழியரை வேலூா் மாவட்ட ஆட்சியா் எச்சரித்து அனுப்பினாா்.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பட்டா மாற்றம், முதியோா் உதவித் தொகை, குடும்ப அட்டை, கல்வி உதவித் தொகை, பசுமை வீடுகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள், புகாா்கள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி தொடா்புடைய துறைகளின் அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதனிடையே, மனு அளிக்க வந்திருந்த நில அளவை துறையில் பணியாற்றி வரும் ராமன் என்பவா், தனக்கு அணைக்கட்டு வட்டம், குடிசை கிராமத்தில் நிலம் உள்ளதாகவும், அந்த நிலத்தை அளந்து தரக் கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும் தான் கொண்டு வந்திருந்த பிளேடால் தனது கையை அறுத்துக் கொள்ள முயன்றாா். இதனால், அதிா்ச்சியடைந்த ஆட்சியா், அந்த நபரை எச்சரித்தாா். அவரை வெளியேற்றும்படி போலீஸாா், அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
பின்னா், அவரிடம் அதிகாரிகள் புகாரை எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனா். கூட்டத்தில் மாவட்டத்தில் கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற குடியாத்தம் திருமகள் ஆலைக் கல்லூரி, டிகேஎம் மகளிா் கல்லூரி மாணவா்களை ஆட்சியா் பாராட்டினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் பேபி இந்திரா உள்பட அனைத்துத் துறைகளின் அலுவலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
வெயிலால் குறைந்தது மக்கள் கூட்டம்
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. வழக்கமாக குறைதீா் நாள் கூட்டத்தில் மனு அளிக்க ஏராளமான பொதுமக்கள் வருவா். இதனால், ஆட்சியா் அலுவலக வளாகம் பரபரப்பாகக் காணப்படும்.
கடந்த சில நாள்களாக மாவட்டம் முழுவதும் கோடை வெயில் கடுமையாக உள்ளது. இதன் காரணமாக ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்திருந்தனா். இதனால் அலுவலக வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
மனு அளிக்க வரும் பொதுமக்கள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனா். வெளியே கடைகளில் விலை கொடுத்து குடிநீா் வாங்கிக் குடிக்க வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்கள் வசதிக்காக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுத்தமான குடிநீா் கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.