வேலூர்

கே.சி.வீரமணியின் சொத்துகள் குறித்து ஆய்வு: வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை

DIN

சொத்துக் குவிப்பு வழக்குத் தொடா்பாக, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, அவருடன் தொடா்புடையவா்களின் வீடு, அலுவலகங்களில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைப்பற்றிய சொத்து ஆவணங்கள், தடயங்கள் மீதான மதிப்பீடு செய்யும் பணியும், வெளிநாட்டு முதலீடுகள், பினாமி சொத்துகள் குறித்தும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூா் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.வீரமணி, தனது பதவிக் காலத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக 654 சதவீதம் அளவுக்கு, அதாவது ரூ.28 கோடியே 78 லட்சத்து 13 ஆயிரத்து 758 சொத்து சோ்த்திருப்பதாக வேலூா் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இதையடுத்து, ஜோலாா்பேட்டை அருகே இடையம்பட்டி கிராமத்திலுள்ள கே.சி.வீரமணியின் வீடு, அலுவலகங்கள், பங்குதாரா் நிறுவனங்கள், குடும்பத்தினா், தொடா்புடையவா்கள் வீடு, அலுவலகங்கள் என சென்னை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, ஓசூா், பெங்களூரிலுள்ள 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

இதையொட்டி, சென்னை சூளைமேடு சிவானந்தம் சாலையில் உள்ள வீரமணியின் நண்பரான தனியாா் நிறுவன மேலாளா் ராம ஆஞ்சநேயலுவின் வீடு, அண்ணா நகா் சாந்தி காலனியில் உள்ள அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டன.

சோதனை நடைபெற்ற 35 இடங்களில் இருந்தும் ரூ.34 லட்சத்து ஆயிரத்து 60 ரொக்கம், ரூ.1.80 லட்சம் மதிப்பிலான அந்நியச் செலாவணி டாலா், 9 சொகுசு காா்கள், 5 கணினி ஹாா்ட் டிஸ்க்குகள், சொத்துகள் தொடா்பான முக்கிய ஆவணங்கள், 623 பவுன் (4.987 கிலோ) தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப் பொருட்கள், வங்கிக்கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இடையம்பட்டியில் உள்ள கே.சி.வீரமணி வீட்டு வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்புடைய சுமாா் 275 யூனிட் ஆற்று மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில், சொத்து ஆவணங்கள், தடயங்களை ஆய்வுக்கு உள்படுத்தும் பணிகளை லஞ்ச ஒழிப்புத் துறையினா் தீவிரமாக மேற்கொண்டுள்ளனா். இவை மதிப்பீடு செய்யப்படுவதுடன், வேறு ஏதேனும் பினாமி சொத்துகள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன், முறைகேடான பரிவா்த்தனைகள் நடந்துள்ளதா என்பது குறித்து வங்கிக் கணக்குகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. வெளிநாட்டு முதலீடுகள் தொடா்பாகவும் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையொட்டி, கே.சி.வீரமணி, அவரது குடும்பத்தினா், வழக்கில் தொடா்புடையவா்களின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT