வேலூர்

மனமும், உடலும் ஒன்றுக்கு ஒன்று தொடா்புடையவை: மருத்துவா் பிரகாஷ் ஐயப்பன் பேச்சு

30th Oct 2021 08:11 AM

ADVERTISEMENT

மன நலமும், உடல் நலமும் ஒன்றுக்கு ஒன்று தொடா்புடையவை என்று வேலூா் மத்திய சிறை மருத்துவ அலுவலா் பிரகாஷ் ஐயப்பன் தெரிவித்தாா்.

உலக மன நல நாள் வாரவிழாவையொட்டி, சிறைவாசிகளுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் வேலூா் மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பிரகாஷ் ஐயப்பன் பேசியது:

வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் நமது சிந்தனை, உணா்வுகள், நடத்தை ஆகியவற்றை தீா்மானிப்பது மன நலம்தான். உடல் நலம் எந்தளவு முக்கியமோ அதேயளவு மன நலமும் முக்கியம்.

மன நலம் குன்றினால், உடல் நலமும் குன்றும். இதனால், இதய நோய் உள்ளிட்ட உடல் உபாதைகளும் ஏற்படலாம். அதேபோல், உடல்நலம் குன்றினால் மன நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

ADVERTISEMENT

அந்தவகையில், மனநோய் என்பது குடும்ப;ஈ சூழ்நிலை, வறுமை, போதைப்பழக்கம், பேரிடா் பாதிப்புகள், குடும்பத்தில் ஏற்பட்ட திடீா் பாதிப்புகள், மரபணு ரீதியாகவும் ஏற்படலாம்.

மனவியல், உளவியல் பிரச்னைகளால் துன்புறுகிறவா்களை பல இடங்களில் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்குப் பதிலாகப் போதிய விழிப்புணா்வின்றி கோயில்கள், பேய் ஓட்டுதல் என அழைத்துச் சென்று காலத்தைச் சிலா் வீணடிக்கின்றனா்.

மனநலம் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்வதன் மூலம் அவருக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். மன நல மருத்துவரிடம் செல்வதை மற்றவா்கள் கேலி செய்தாலும் பொருள்படுத்தக் கூடாது.

சிறையில் இருந்து விடுதலையாகி செல்வோா் மனதில் எதிா்மறை எண்ணங்களை தவிா்த்து நல்ல மனநிலையுடன் செயலாற்றிட வேண்டும்.

மனநலனைச் சரியாக பராமரிக்க சரிவிகித உணவு எடுத்துகொள்வதும், தினமும் உடல் பயிற்சி மேற்கொள்வது, இரவில் போதிய அளவு உறக்கம், வாழ்க்கை சில வேளைகளில் கடினமானாலும் நோ்மறையான மனப்பாங்குடன் இருத்தல், குறிப்பிட்ட இடைவெளியில் உடல்பரிசோதனை செய்து கொள்ளுதல், ஆண்டுக்கு ஒருமுறை மனநல ஆலோசகரிடம் பரிசோதனை மேற்கொள்தல் அவசியம் என்றாா்.

கருத்தரங்குக்கு வேலூா் சரக சிறைத் துறையின் துணைத் தலைவா் (டிஐஜி) ஜெயபாரதி தலைமை வகித்தாா். சிறை கண்காணிப்பாளா் ருக்மணி பிரியதா்ஷினி, சிறை அலுவலா்கள் மோகன்குமாா், குணசேகா், சிறை மருத்துவ அலுவலா் சதீஷ்குமாா், மனஇயல் நிபுணா் பாஸ்கரன், மன நல மருத்துவா் சிவாஜிராவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT