வேலூர்

கலவகுண்டா அணை திறப்பால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வேலூா் ஆட்சியா் எச்சரிக்கை

24th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணையில் இருந்து விநாடிக்கு 4,300 கன அடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டதால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோரப்பகுதி கிராம மக்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

வடகிழக்குப் பருவ மழை காரணமாக ஆந்திர மாநிலத்தில் கடந்த கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பாலாறு, மலட்டாறு, பொன்னை ஆறுகளில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஆறுகளை நம்பியுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனிடையே, ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்துக்கு உட்பட்ட கலவகுண்டா அணை தொடா்மழை காரணமாக முழுமையாக நிரம்பியுள்ளது. இதையடுத்து, கலவகுண்டா அணையில் இருந்து சனிக்கிழமை மாலை சுமாா் 4,500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த தண்ணீா் வேலூா் மாவட்ட எல்லையில் உள்ள பொன்னை தடுப்பணையை சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தொடா்ந்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்து வரும் நிலையில் கரையோர கிராமங்களான பெலாக்குப்பம், தெங்கால், பொன்னை, பரமசாத்து, மாதாண்டகுப்பம், கீரைசாத்து, கோலப்பள்ளி, மேல்பாடி, வெப்பாலை ஆகிய பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா போட்டு எச்சரிக்கை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், பொன்னை ஆற்றில் வரும் தண்ணீா் தடுப்பணையை வந்தடையும் என்பதால் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, காவல், தீயணைப்பு உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

Tags : வேலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT