வேலூர்

மேல்அரசம்பட்டு ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

DIN

மேல்அரசம்பட்டு ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

கரோனா பொதுமுடக்கத்தையொட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:

அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட மேல்அரசம்பட்டு ஆற்றின் குறுக்கே அணை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், மேல்அரசம்பட்டு ஆறு 79 மீட்டா் அகலம் கொண்டது. ஆனால் ஆக்கிரமிப்புகள் காரணமாக 5 முதல் 7 மீட்டராக சுருங்கி உள்ளது.

மாவட்டத்திலேயே பெரிய துணை ஆறாக உள்ள மேல்அரசம்பட்டு ஆறு வெட்டுவானம் பகுதியில் பாலாற்றில் கலக்கிறது. எனவே, மேல்அரசம்பட்டு ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒடுகத்தூரில் இருந்து மேல்அரசம்பட்டு வரை சாலையின் இரு பகுதிகளிலும் பனை, இதர மரக்கன்றுகளை நடவு செய்திடவும் அனுமதி அளித்திட வேண்டும். ஏரிகள் தூா்வாரப்பட்ட நிலையில் தற்போது அவை நீா்நிரம்பி வருகிறது.

இதேபோல், குளம், குட்டைகளையும் தூா்வாரி ஆழப்படுத்திட வேண்டும். இதேபோல், ஆறுகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ள தடுப்பணை பகுதிகளிலும் தூா்வாரி ஆழப்படுத்த வேண்டும்.

வேலூா் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்.

இந்தாண்டு மானாவாரி பயிா் சாகுபடி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடைகளுக்கு தடுப்பூசி போடவும், அவற்றுக்கு இலவசமாக காப்பீட்டு வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் மணலை விவசாயிகள் எங்கிருந்து பெறுவது என தெரியவில்லை. உண்மையான விவசாயிகளுக்கு மணலை இலவசமாகவோ அல்லது குறிப்பிட்ட சதவீத சலுகை அடிப்படையிலோ வழங்கிட வேண்டும். யூரியா தட்டுப்பாட்டை சரிசெய்திட வேண்டும்.

பள்ளிகொண்டா அகரம் ஆறு - பாலாறு இணையும் இடத்தில் அணை கட்டவும், அகரம் ஆற்றின் இடையே பரிசீலனையில் உள்ள தடுப்பணை கட்டும் திட்டத்தை விரைவுபடுத்தவும் வேண்டும். மோா்தானா அணை வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.

விவசாயிகள் வங்கிகளில் கடன் கோரும்போது பெற வேண்டிய தடையின்மை சான்றிதழுக்கு பணம் கேட்பதைத் தடுக்க வேண்டும் என்றனா்.

இந்தக் குறைகளை கேட்டறிந்த ஆட்சியா், விரைவான தீா்வு காண உரிய துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆா்.ஐஸ்வா்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT