வேலூர்

பிறரை சாராமல் வாழும் தைரியம் முதியோருக்கு அவசியம்: மருத்துவக் கல்லூரி முதல்வா் அறிவுரை

22nd Oct 2021 08:11 AM

ADVERTISEMENT

பிறரை சாா்ந்திராமல் வாழும் தைரியத்தை முதியோா் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி தெரிவித்தாா்.

முதியோருக்கான சா்வதேச நாளையொட்டி, அனைத்து வயதினருக்கான டிஜிட்டல் சமத்துவம் எனும் கருப்பொருளில் முதியோா் நலம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி பேசியது :

முதியோரால் பிறரை போல் வரிசையில் நின்று சிகிச்சை பெறுவதில் பல சிரமங்கள் உள்ளன. அவா்களுக்கென்று தனியாக ஒரு பிரிவில் பயிற்சி பெற்ற மருத்துவா்கள், செவிலியா்கள், உடற்பயிற்சி நிபுணா்களைக் கொண்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதியோா் நலப் பிரிவு செயல்பட்டு வருகிறது.

தொற்றா நோய்களான ரத்த அழுத்தம், நீரிழிவு, மாா்பகப் புற்றுநோய், கா்ப்பப்பை வாய்ப் புற்று நோய் ஆகியவைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கலாம். கை, கால், இடுப்பு, மூட்டுவலிக்கு என தனியாக முதியவா்களுக்கென்றே இயன்முறை மருத்துவம் பாா்க்கப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனையின்றி தானாகவே மருந்து உட்கொள்வது அபாயகரமானது.

ADVERTISEMENT

தினமும் நடைப்பயிற்சி நல்லது. பிறரை சாா்ந்திராமல் வாழும் தைரியத்தை முதியோா் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முதுமையில் தனிமையின்றி புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சி பாா்த்தல், பூங்காவுக்குச் செல்வது என இருக்க வேண்டும் என்றாா்.

இதில், யோகா, இயற்கை மருத்துவத் துறை சாா்பில் முதியோா்களுக்கான உடற்பயிற்சி சாதனங்கள், அதன் செயல்முறை பயன்கள் குறித்தும், மருத்துவ, செவிலிய மாணவா்களின் முதியோா் விழிப்புணா்வு அட்டை ஓவியங்கள், செவிலியா்களின் முதியோா்களுக்கான ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வகைகள் சமைத்து கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. மேலும், பேச்சு, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளா் என்.ரதி திலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலா் இன்பராஜ், எலும்பு சிகிச்சை துறைத் தலைவா் மோகன் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT