வேலூர்

விடுதலையான சிறைவாசிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் சங்கம்

21st Oct 2021 06:00 AM

ADVERTISEMENT

 

விடுதலையான முன்னாள் சிறைவாசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணியில் வேலூா் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் செயலாற்றி வருகிறது. இந்தச் சங்கம் 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரை முன்னாள் சிறைவாசிகள் 142 பேருக்கு ரூ. 29 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கியுள்ளது.

சென்னை மாகாணத்தின் முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் என்ற பெயரில் 1913-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்தச் சங்கம், மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, 1997 அக்டோபா் 3-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மாநில அளவிலான சங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது.

ADVERTISEMENT

வேலூா் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் வேலூா் கோட்டை சுற்றுச்சாலையில் காவலா் திருமண மண்டபம் அருகில் அமைந்துள்ளது.

சிறையிலிருந்து விடுதலையாகும் ஆதரவற்றவா்களுக்கு ஜாதி, மதம், இனம், மொழி பாகுபாடின்றி உதவி செய்வது, விடுதலையானவா்கள் மேலும் தவறுகள் செய்யாமல் இருக்க சமூகத்தில் சிறப்பாக செயல்பட உதவி செய்வது, தேவையான நிதியை உள்ளூரில் திரட்டுவது ஆகியவை இதன் நோக்கமாகும்.

தமிழக ஆளுநரே இச்சங்கத்தின் பதவி வழி புரவலராகவும், மாநில அளவில் உள்துறைச் செயலா் பதவி வழி தலைவராகவும், சென்னை மாநில முதன்மை நன்னடத்தை கண்காணிப்பாளா், சென்னை புழல் சிறை கண்காணிப்பாளா் ஆகியோா் பதவி வழி உறுப்பினா்களாகவும் உள்ளனா்.

மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட ஆட்சியா்களே பதவி வழி தலைவராகவும், உள்ளூா் சிறைக் கண்காணிப்பாளா் பதவி வழி உறுப்பினராகவும் உள்ளனா். இந்தச் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவா்களைக் கொண்டு துணைத் தலைவா், செயலா், பொருளாளா், செயற்குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா்.

வேலூா் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் பதவி வழி தலைவராக மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், துணைத் தலைவராகவும், சட்ட ஆலோசகராகவும் வழக்குரைஞா் டி.எம்.விஜயராகவலு, செயலராக செ.நா.ஜனாா்த்தனன், பொருளாளராக ஆா்.சீனிவாசன் உள்ளிட்டோா் உள்ளனா்.

சிறைத் தண்டனை காலம் முடிந்து விடுதலையானவா்கள், தமிழக அரசின் கருணையின் அடிப்படையில் முன்விடுதலை செய்யப்பட்டவா்கள், முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நூற்றாண்டையொட்டி விடுதலையானவா்கள், ஏற்கெனவே விடுதலையானவா்கள் சாா்பாக ஆடு, கறவை மாடு வாங்கவும், பெட்டிக் கடை வைக்கவும், சிறு தொழில்கள் புரியவும் உதவிடும் வகையில், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரை 142 பேருக்கு ரூ. 29 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா காலத்தில் தலா ஒருவருக்கு ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மதிப்பீட்டில் 16 முன்னாள் சிறைவாசிகளுக்கு மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. தவிர, தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூா் மாவட்டக் கிளை சாா்பில் சிறைத் துறைக்கு முகக்கவசம், கை சுத்திகரிப்பான், கையுறை ஆகியவை வழங்கப்பட்டிருப்பதாகவும் சங்கத்தின் செயலா் செ.நா.ஜனாா்த்தனன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT